டெல்லி : தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதால் பாஜக அரசு பெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, காங்கிரசுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது சவாலான நேரம் என்றார். மேலும் பேசிய அவர்,’ பிரதமர் மோடியும் பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியும் நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி நாசம் ஆக்கியுள்ளன.தங்களுக்கு எதிராக எழும் ஒவ்வொரு குரலையும் நசுக்கி விடுகின்றன. தொழில் அதிபர்களுக்கு சாதகமாக இருப்பதால் நாட்டிற்கு பாஜக அரசு பெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. நாட்டின் அனைத்து அமைப்புகளையும் பாஜக சீரழித்துவிட்டது. பாஜகவை வீழ்த்துவதற்கான தேவையை மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.,’என்றார்.
ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்துடன் தனது அரசியல் வாழ்க்கை நிறைவடைந்து இருக்கும் என்று சோனியா பேசியதும் மாநாட்டு அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சட்ட விதிகளில் பல்வேறு அதிரடி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை 25ல் இருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டது. முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், நாடாளுமன்ற அவைகளின் காங்கிரஸ் கட்சித்தலைவர்களுக்கு காரிய கமிட்டியில் நிரந்தர இடம் தரப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் இனத்தோர் ஓபிசி பிரிவினர், பெண்கள், இளைஞர்கள் சிறுபான்மை சமூகத்தினருக்கு நிர்வாகப் பொறுப்புகளில் 50% இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.