பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை ஒழிக்க பனை ஓலை கூடையில் திருப்பதி லட்டு: செயல் அதிகாரி தகவல்

திருமலை: ‘திருப்பதியில் பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில், ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தை பனை ஓலை கூடையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று செயல் அதிகாரி தர்மா கூறினார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் லட்டு பிரசாதம் வாங்கி அவற்றை பிளாஸ்டிக் கவர்கள் மூலம் கொண்டு சென்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக பிளாஸ்டிக் கவருக்கு மாற்றாக டிஆர்டிஓ மூலம்  இயற்கை முறையிலான மக்கும் தன்மை கொண்ட கவர்களை தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் பனை ஓலை கூடையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக இயற்கை வேளாண் விஞ்ஞானி விஜயராம் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டியை சந்தித்து லட்டு பிரசாதம் கொண்டு செல்ல பனை ஓலை கூடைகளை காண்பித்தார். இதனை பார்வையிட்ட பின் பனை ஓலை கூடை விரைவில் லட்டு கவுண்டர்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தர்மா ரெட்டி தெரிவித்தார். அதே நேரத்தில், பனை கூடைகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் லட்டு பிரசாதங்களை எடுத்துச் செல்லும் பக்தர்களுக்கு பனை ஓலை கூடைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.