புனே: மஹாராஷ்டிராவில், வியாபாரியிடம் 512 கிலோ வெங்காயம் விற்பனை செய்த விவசாயிக்கு, வெறும் 2.49 ரூபாய் மட்டுமே நிகர லாபமாக கிடைத்ததால், அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா – – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, புனே மாவட்டத்தில் சோலாபூரைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திர சவான், 63. இவர், கடந்த வாரம் தான் விளைவித்த 512 கிலோ வெங்காயத்தை, சோலாபூர் மார்க்கெட் வியாபாரியிடம் விற்றுள்ளார். இதில், அவருக்கு வெறும் 2.49 ரூபாய் மட்டுமே நிகர லாபமாக கிடைத்ததால், அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து விவசாயி ராஜேந்திர சவான் கூறியது: சோலாபூர் மார்க்கெட்டில் 512 கிலோ வெங்காயத்தை வியாபாரியிடம் விற்றேன். ஆனால், அவர் ஏற்று கூலி, இறக்கு கூலி, போக்குவரத்து செலவு மற்றும் சில செலவினங்களை குறிப்பிட்டு, நிகர லாபமாக வெறும் 2.49 ரூபாய் மட்டுமே அளித்தார். ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் என்ற கணக்கில் வியாபாரி என்னிடமிருந்து பெற்றுள்ளார். நான் விற்றது தரமான வெங்காயம். ஆனால், வியாபாரி தரமற்ற வெங்காயம் எனக் கூறுகிறார். இது எனக்கு மட்டுமல்ல, மாநிலத்தில் உள்ள வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அவமரியாதை. இந்த மாதிரி லாபம் கிடைத்தால், நாங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துவது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், ‘விவசாயி கொண்டுவந்தது தரமற்ற வெங்காயம் என்பதாலேயே, அனைத்து செலவுகளும் போக, நிகர லாபமாக இரண்டு ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளது’ என வியாபாரி தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement