பெங்களூரு: பாபாசாகேப் அம்பேத்கரின் பொருளாதார முனைவர் பட்ட ஆய்வேடான ‘ரூபாயின் சிக்கல்’ வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பெங்களூருவில் அவரது பொருளாதார சிந்தனைகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் கடைசி மனிதனுக்கும் சுதந்திரம், சமத்துவம், நீதி கிடைக்க வேண்டும் என பாபாசாகேப் அம்பேத்கர் பாடுபட்டார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை வடித்த அவர், முதல் சட்ட அமைச்சராகவும் திறம்பட பணியாற்றினார். அவரது கடினமான உழைப்பாலே நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இன்று சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைத்துள்ளது.
அம்பேத்கரின் சட்டவியல் சிந்தனைகள் பேசப்பட்ட அளவுக்கு பொருளாதார சிந்தனைகள் பேசப்படவில்லை. இந்திய சமூக, பொருளாதார துறைக்கு அவர் அளவுக்கு பங்களிப்பு செய்தவர்கள் யாரும் இல்லை. வெளிநாடுகளின் மத்திய வங்கி அமைப்பை ஆராய்ந்த அம்பேத்கர், இந்தியாவுக்கு அத்தகைய வங்கியை உருவாக்க வேண்டும் என தீர்மானித்தார். அம்பேத்கரின் சமூக பொருளாதார சிந்தனைகளுக்காக நோபல் பரிசு வழங்க வேண்டும். இவ்வாறு பொம்மை தெரிவித்தார்.