ஈரோடு கிழக்கு: எடுபடுமா கவர்ச்சி அரசியல்? இப்படியும் ஒரு இடைத்தேர்தல்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரதான போட்டி என்பது காங்கிரஸ், அதிமுக இடையில் தான். ஆனால் பிரச்சாரக் களம் திமுக, அதிமுக இடையிலான போட்டியை போல் அமைந்துவிட்டது. குறிப்பாக
எடப்பாடி பழனிசாமி
தனது பிரச்சாரத்தில் ஜெயலலிதாவை முன்னிறுத்தி வாக்குகளை சேகரித்தார். ஆனால் இடைத்தேர்தலுக்கு முன்பு வரை ஜெயலலிதாவிற்கான முக்கியத்துவம் கட்சி ரீதியில் தரப்படவில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஜெயலலிதா பிறந்த நாள்

ஏனெனில் ஜெயலலிதாவின் 75வது ஆண்டு பிறந்த நாள் சமீபத்தில் தான் வந்து சென்றது. அதிமுக இருபெரும் தலைவர்களில் ஒருவருக்கு பவள விழா கொண்டாடும் நேரத்தில் அதற்குரிய மலர் வெளியீடு, பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள், கட்சி கூட்டம் என எதுவும் இல்லை. இதற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேலைகள் இருந்ததாக காரணங்கள் சொல்லலாம்.

கவர்ச்சிகர வாக்குறுதிகள்

ஆனால் அதற்கு முன்னதாக கூட ஜெயலலிதாவிற்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை எனக் கூறுகின்றனர். இப்படி கட்சியில் பெரிதாக முக்கியத்துவம் தராமல் வாக்கு அரசியலுக்காக மட்டும் அவரை பயன்படுத்துவது பெரிதாக எடுபடாது என்றே சொல்கின்றனர். அடுத்ததாக கவர்ச்சிகர வாக்குறுதிகளை சுட்டிக் காட்டலாம். ஆட்சிக்கு வர விரும்பும் எந்த ஒரு கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கும்.

முதல் தேர்தல் அறிக்கை

1962ஆம் ஆண்டு தேர்தலை ஒட்டி திமுகவின் முதல் தேர்தல் அறிக்கை வெளியானது. அப்போது கவர்ச்சிகர வாக்குறுதிகள் எதுவும் இல்லை. மக்கள் நலத் திட்டங்களை செய்து தருவோம் என்று தான் கூறினார்கள். அதன்பிறகு 1967ல் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்பது தான் முதல் கவர்ச்சிகர வாக்குறுதி. அதிலிருந்து திராவிட கட்சிகள் மாறி மாறி வாக்குறுதிகளை அள்ளி வீசின.

முக்கியமான திட்டங்கள்

ஆனால் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய கட்சிகள் எதுவுமே இல்லை என்கின்றனர். அந்த வகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அரசு அமல்படுத்திய திட்டங்களான மகளிருக்கு இலவச பயணம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் ஆகியவை கவனம் பெற்றன. இவை மூன்றும் மக்களுக்கு நேரடியாக பயன் தரக்கூடியவை. இதுபோன்ற திட்டங்களை தான் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

சிக்கலான விஷயங்கள்

ஆனால் மகளிருக்கான 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் போன்ற திட்டங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் நிதிச்சிக்கல் ஏற்படும். எந்த ஒரு வகையிலும் சமாளிக்கவே முடியாத நிலைக்கு தள்ளிவிடும் என எச்சரிக்கின்றனர். இருப்பினும் திமுக வாக்குறுதி அளித்துவிட்டது.

பட்ஜெட்டில் அறிவிப்பு

வரும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என முதல்வர்
மு.க.ஸ்டாலின்
தெரிவித்துள்ளார். எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனவே மேற்குறிப்பிட்ட விஷயங்களால் எதிர்க்கட்சிகள் ஒருபடி பின் தங்கிவிட்டதாக கூறுகின்றனர். அதேசமயம் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது, ஷெட்டில் அடைத்து வைத்தது,

இடைத்தேர்தல் முடிவுகள்

ரொக்கம் கொடுத்தது என ஆளுங்கட்சிக்கு எதிராக பல விஷயங்கள் ஈரோடு கிழக்கில் முன்வைக்கப்படுகின்றன. இது மீண்டும் ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிட்டது. இந்த கவர்ச்சி அரசியலால் மக்கள் ஈர்க்கப்படுவார்களா? யாருக்கு சாதகமாக, பாதகமாக மாறப் போகிறது என்பது வரும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.