ஐ.நாவில் கைலாசா: நித்யானந்தா அனுப்பிய பெண் பிரதிநிதிகள்… இது வேற லெவல் டிஸ்கஷன்!

நித்யானந்தா என்றால் கைலாசா தீவு ஞாபகம் வரும் அளவிற்கு மக்கள் மனங்களில் பதியத் தொடங்கி விட்டது. இந்த தீவு எங்கிருக்கிறது? நித்யானந்தா எங்கிருக்கிறார்? அவர் மீது இந்தியாவில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியுமா? போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை.

நித்யானந்தா நடவடிக்கை

இதற்கிடையில் தனது கைலாசாவை சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நித்யானந்தா முடுக்கி விட்டுள்ளார். தன்னுடைய நாட்டிற்கு தனி சட்டம், வெளியுறவுக் கொள்கை, நாணயம், ரிசர்வ் வங்கி, பாஸ்போர்ட், இணையதளம், அதிகாரிகள், அமைச்சகம், தனிக்கொடி என பல விஷயங்களை அமல்படுத்தி உள்ளார். மேலும் பல்வேறு நாடுகளுடன் தூதரக ரீதியில் நட்புறவை உருவாக்கி கொண்டிருக்கிறார்.

கைலாசாவின் புகழ்

இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கோயில்களை நிர்மானித்து தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் வேலைகளும் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பான விஷயங்கள் நித்யானந்தாவின் இணையதளத்திலும், யூ-டியூப் பக்கத்திலும் தொடர்ந்து வெளியாகின்றன. லேட்டஸ்ட் அப்டேட்டாக அமெரிக்காவும், ஐ.நா சபையும் கைலாசா நாட்டை அங்கீகரித்து விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா கூட்டத்தில் பெண் பிரதிநிதிகள்

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா நாட்டின் சார்பில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் விஜய பிரியா, முக்திகா ஆனந்தா, சோனா காமத், நித்யா ஆத்மதயகி, நித்யா வெங்கடேஷானந்தா, ஸ்வோவேனி, பிரியா பிரேமா உள்ளிட்டோர் அடங்குவர். இந்த கூட்டத்தில் நித்யானந்தாவின் புகைப்படத்தை வைத்து பெண் சீடர் ஒருவர் வணங்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகின.

பெண்கள் முன்னேற்றம்

இது நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. ஐ.நா ஏற்பாடு செய்திருந்த கூட்டம் என்பது பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்து விரிவான விவாதிக்க கூட்டப்பட்டிருந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

புள்ளிவிவரங்கள் சமர்பிப்பு

அந்த வகையில் கைலாசாவில் இருந்தும் வருகை புரிந்தனர். இவர்கள் பேசுகையில், சர்வதேச அளவில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள், பாலின பாகுபாடு, மிரட்டல்கள் உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளன எனக் குறிப்பிட்டனர். இதுதொடர்பான புள்ளிவிவரத்தை சமர்பித்தனர். குறிப்பாக பெண் பிரதிநிதிகளுக்கே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

தீர்வு சொல்லும் கைலாசா

எனவே பெண்களின் நிலையை மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கு தரமான கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை, பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும். அதற்கு அறிவார்ந்த இந்து சமய நாகரீகம் புத்துயிர் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பல்வேறு நாட்டு பிரதிநிதிகளை கைலாசா பெண் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். அப்போது கைலாசாவின் கொள்கைகள், தற்போது உலக நாடுகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.