திருவனந்தபுரம்: புகார் கொடுக்க வந்த முதியவரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாலக்காட்டை சேர்ந்த இன்ஸ்பெக்டர் காருக்குள் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் லிபி. இவர் பாலக்காடு மாவட்டம் மீனாட்சிபுரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரிடம் புகார் கொடுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த ஒரு முதியவர் வந்தார். அப்போது அவரிடம் இன்ஸ்பெக்டர் லிபி அவமரியாதையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரி களிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் லிபி பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் தன்னுடைய காரில் திருச்சூருக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள டோல்கேட் அருகே காரை நிறுத்திய லிபி, கேனில் தயாராக கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். காரில் தீ எரிவதை பார்த்த டோல்கேட்டில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். காயமடைந்த இன்ஸ்பெக்டர் லிபி உடனடியாக திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.