புதுடில்லி: புதுடில்லியில் நடந்த மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான
வழக்கில், சிபிஐ அலுவலகத்தில் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆஜரானார்.
புதுடில்லியில் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை, சி.பி.ஐ.,விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், கடந்த வாரம், விசாரணைக்கு ஆஜராகும்படி, அம்மாநில துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு, சி.பி.ஐ.,இரண்டாவது முறையாக, ‘சம்மன்’ அனுப்பியது. முறைகேடு தொடர்பாக புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்த சி.பி.ஐ., முடிவு செய்தது.
விசாரணைக்கு நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் வேண்டும் என மணீஷ் சிசோடியா தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ., அவகாசம் வழங்கியது. இன்று(பிப்.,26) ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட மணீஷ் சிசோடியா நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பேன் என அறிவித்தார். அவரை கைது செய்ய சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மிகட்சியினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், டில்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து தொண்டர்கள் புடைசூழ, சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜராக மணீஷ் சிசோடியா கிளம்பி சென்றார்.
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சிபிஐ அலுவலகத்திற்கு மீண்டும் கிளம்பி செல்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். லட்சகணக்கான குழந்தைகள்
மற்றும் கோடிக்கணக்கான மக்களின் ஆசி எனக்கு உள்ளது. சில நாட்கள் சிறையில் இருப்பதுகுறித்து கவலைப்பட மாட்டேன். நான், நாட்டிற்காக தூக்கில் தொங்கிய பகத்சிங்தை பின்பற்றுபவன். பொய் குற்றச்சாட்டுகளுக்காக சிறை செல்வது எனக்கு பெரிய விஷயமில்லை எனக்கூறியுள்ளார்.
மரியாதை
வழியில், ராஜ்காட்டில் உள்ள மஹாத்மா காந்தி சமாதியில் மரியாதை செலுத்திய மணீஷ் சிசோடியா, சிறிது நேரம் தியானம் செய்தார்.

அங்கு கூடியிருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள், மணிஷ் சிசோடியாவிற்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.
அவர்கள் மத்தியில் மணீஷ் சிசோடியா பேசுகையில், நான் நேர்மையானவன்.
கடினமான உழைப்பாளி. எனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆம் ஆத்மி வளர்ந்து வருவதை கண்டு பாஜ., பயப்படுகிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை கண்டு அஞ்சவில்லை. என் மீது பொய் குற்றச்சட்டு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
144 தடை உத்தரவு
மணீஷ் சிசோடியா நேரில் ஆஜராவதை முன்னிட்டு சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவரது வீடு முன்பும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்