புதுடெல்லி: “புதிய தேசியக் கல்வி கொள்கை எதிர்கால தேவைக்கேற்ப நாட்டின் கல்வி முறையை மாற்றியமைத்துள்ளது,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பட்ஜெட்டில் அறிவித்த முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான ஆலோசனைகள், பரிந்துரைகளைப் பெறுவதற்காக அரசு நடத்தும் 12 பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையதள கருத்தரங்கின், 3வது கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் கல்வி அமைப்பில் நெகிழ்வுதன்மை இல்லாததால் இத்துறை மிகவும் கடினமானதாக இருந்தது. ஆனால், புதிய தேசியக் கல்வி கொள்கையினால் இளைஞர்களின் கல்வி, திறன் மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆசிரியர்களின் பங்களிப்பு வகுப்பறையுடன் நின்று விடாமல், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கிடைக்க வகை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், நகரம் மற்றும் கிராமங்களுக்கான இடைவெளி நிரப்பப்படுவதுடன் ஆசிரியர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளும் திறக்கப்படுகின்றன.
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம் 4.0-ன் கீழ், வரும் ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களின் தேவைக்கேற்ற திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், தகவல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் டிரோன்கள் போன்ற தொழில்துறைகளில் பணியாளர்களை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.