பச்சை கொடியை அசைச்சா மாட்டு வண்டி போகனும்.. அதானய்யா உலக வழக்கம்..! விஐபிக்களை வியர்க்க வைத்த தருணம்

கமுதி அருகே மாட்டு வண்டி பந்தயத்திற்கு பச்சை கொடி காட்டுவதற்கு முன்பாக முக்கிய பிரமுகர்கள் கூட்டத்திற்குள் சீறிபாய்ந்த மாட்டு வண்டிகளால் போட்டியை தொடங்கி வைக்க வந்தவர்கள் தலைதெறிக்க ஓடிய சம்பவம் அரங்கேறியது. மாடுகளின் வேகத்தால் தானாக தொடங்கிய மாட்டு வண்டி பந்தயம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…

கமுதி அடுத்த காணிக்கூர் பாதாளகாளியம்மன் மாசி களரி திருவிழாவையொட்டி பூஞ்சிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலாவதாக நின்ற மாட்டு வண்டிக்கு அருகில் வரிசையாக வந்து நின்ற விஐபிக்கள் போட்டியை தொடங்கி வைக்க ஆயுத்தமாகி கொண்டிருந்தனர்.

பச்சைக்கொடியை அசைத்து பந்தயத்தை துவங்கி வைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் பச்சைக்கொடி முக்கிய பிரமுகரின் கைகளுக்கு செல்வதற்கு முன்பாக, முதலாவது நின்று கொண்டிருந்த மாட்டு வண்டியை முந்திக் கொண்டு, 2 வது வண்டி விஐப்பிகளை நோக்கி சீறிப்பாய்ந்தது.

இதனால் திகிலடைந்த விஐபிக்கள் விட்டால் போதும் என்று தலைதெறிக்க ஓடி ஒதுங்கினர். அடுத்தடுத்த வண்டிகளும் சாலையிலும், விஐபிக்கள் நின்ற இடத்தை நோக்கியும் சீறிப்பாய்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடைசியாக புறப்பட்ட மாட்டு வண்டி ஒன்று, முதலாவதாக நின்ற வண்டியுடன் மோதி பிண்ணி பிணைந்ததால் அங்கிருந்தவர்கள் ஒரு வண்டியை பிரித்து அந்த மாட்டு வண்டி செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

14 மாட்டு வண்டிகளும் சாலையில் சீறிப்பாய்ந்து எல்லையை நோக்கிச்சென்றது. ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்று வேகம் காட்டி மாட்டு வண்டியை ஓட்டிச்சென்றனர். கடைசி 1 நிமிடம் 3 வண்டிகள் ஒரே வேகத்தில் ஓடிவந்தாலும் எல்லைக்கோட்டை முதலில் தொட்டவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆரவாரமாக நடந்த இந்த மாட்டுவண்டி போட்டியில் ஆரம்பத்தில் முதல் வண்டியாக வரிசையில் வந்து நின்ற , வண்டியில் இருந்த மாடுகள் கழண்று கொண்டதால் , கடைசி வரை பந்தயத்தில் பங்கேற்காமல் ஆரம்பித்த இடத்திலேயே… விஐபிக்களுடன் விரக்தியோடு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.