இந்தூர்: மத்தியப் பிரதேசம் சிம்ரோல் பகுதியில் உள்ளது பி.எம். பார்மஸி கல்லூரி. இங்கு அசுதோஸ் ஸ்ரீவஸ்தவா (24) என்ற மாணவர் பி.பார்ம் படித்துள்ளார். இவர் 7வது செமஸ்டரில் தோல்வியடைந்தார்.
இவரது மதிப்பெண் பட்டியலை பெறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இக்கல்லூரியின் உதவிபோராசிரியர் டாக்டர் விஜய் படேலை, ஸ்ரீவஸ்தவா கடந்தாண்டு அக்டோபர் மாதம் கத்தியால் குத்தினார். இதில் ஸ்ரீவஸ்தவா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கல்லூரி முதல்வர் விமுக்தாசர்மா (54) என்பவருக்கும், முன்னாள் மாணவர் ஸ்ரீவஸ்தவா வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது குறித்துஏற்கெனவே போலீஸில் புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மதிப்பெண் பட்டியல் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாககல்லூரி முதல்வர் விமுக்தா சர்மாவை, கடந்த 20-ம் தேதி சந்தித்த வஸ்தவா, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் முதல்வர் விமுக்தா சர்மாவுக்கு 80 சதவீத காயம் ஏற்பட்டது.அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரி ழந்தார். இது குறித்து விமுக்தா சர்மாவின் மகள் கூறுகையில், ‘‘வஸ்தவா, ஏற்கெனவே எனது தாயாருக்கு வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்து வந்தார். இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால், என் தாயாருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. வஸ்தவா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொலை வழக்கு: இது குறித்து இந்தூர் எஸ்.பி. அளித்த பேட்டியில், ‘‘ஸ்ரீவஸ்தவா மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது’’ என்றார்.