குஜராத்தின் புஜின் பகுதிக்கு அமெரிக்கப் பெண் ஒருவர் சுற்றுலாவுக்காக வந்திருந்தார். அப்போது, அவர் பயணித்த ரயிலில் அவரது பர்ஸை மறந்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு சிராக் என்பவரிடமிருந்து இன்ஸ்டாகிராமில் மெசேஜ் வந்திருக்கிறது. அதில், `உங்களுடைய வேலட்டை ரயிலில் மறந்துவிட்டுச் சென்றுவிட்டீர்கள். அது இப்போது என்னிடம்தான் இருக்கிறது. வந்து வாங்கிச் செல்லுங்கள்’ எனத் தெரிவித்து, அவரது முகவரியையும் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண்ணும், அந்த நபர் சொன்ன முகவரிக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரின் வேலட்டை பத்திரமாக அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்திருக்கிறார் அந்த நபர்.
இது தொடர்பாக அமெரிக்கப் பெண், சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவில், “என்னுடைய வேலட் தொலைந்த பிறகு, இன்ஸ்டாகிராமில் சிராக் என்பவர் எனக்கு மெசேஜ் செய்திருந்தார். அதில், என்னுடைய வேலட் அவரிடம் இருப்பதாகவும், தன்னுடைய முகவரிக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படியும் தெரிவித்திருந்தார். நானும், அவர் சொன்ன முகவரிக்குச் சென்றிருந்தேன். குஜராத்தின் புஜில் பகுதியில் ஓர் உணவகம் ஒன்றில் சிராக்கைச் சந்தித்தேன். அங்கு அவர் வேலட்டை என்னிடம் கொடுத்தார். நானும் அதைத் திறந்து பார்த்தேன், என்னுடைய பொருள்கள், பணம் அப்படியே இருந்தது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த நான், சிராகுக்கு அன்பளிப்பாக கொஞ்சம் பணம் கொடுத்தேன். ஆனால், சிராக் சிறு புன்னைகையுடன் அதைப் புறக்கணித்துவிட்டார்.
அதற்கு பதிலாகப் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கச் சொன்னார். உண்மையான கருணையின் அடிப்படையிலான உதவிகளுக்கு, பணம் வழங்குவது தவறு என்பதை கற்றுக்கொண்டேன். இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் பொதுவாக நடக்கக் கூடியதுதான்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.