சென்னை: வினாத்தாள் பதிவெண் மாற்றக் குளறுபடியால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று குரூப் 2 தேர்வு முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக தொடங்கி நடைபெற்றது. இதனால் தேர்வர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
தமிழக அரசுத் துறைகளில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள 5,446 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 9 லட்சத்து 94,890 பட்டதாரிகள் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நவம்பர் 8-ம் தேதி வெளியிட்டது. அதன்படி முதல்நிலைத் தேர்வு எழுதியதில் மொத்தம் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர்.
இவற்றில் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு 55,071 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் 186 தேர்வு மையங்களில் நேற்றுநடத்தப்பட்டது. இதில் காலையில்நடைபெற்ற தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வின்போது பல்வேறுதேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் மற்றும் வருகைப் பதிவேட்டின் பதிவெண்கள் மாறி இருந்ததால் அறை கண்காணிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள்களை திரும்பப் பெற்றனர். அதன்பின் வருகைப் பதிவேட்டில் உள்ள பதிவெண்ணை கொண்டு, விடைத்தாள் எண்ணை சரிபார்த்து தேர்வர்களுக்கு வழங்கினர்.
இதன்காரணமாக பல்வேறு இடங்களில் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை தேர்வு தாமதமாக தொடங்கியது. சென்னை, மதுரை, கடலூர், சேலம், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர்,திருநெல்வேலி உள்ளிட்ட பலமாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த குளறுபடியால் தேர்வர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இந்த குளறுபடியால் சில பகுதிகளில் வினாத்தாள் லீக் ஆனதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து டிஎன்பிஎஸ்சி சார்பில் அவசர அறிவிப்பு ஒன்றுவெளியானது. அதில், “தேர்வர்களின் வருகைப் பதிவேட்டில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த நிலைமை சரிசெய்யப்பட்டு அனைத்து இடங்களிலும் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த காலதாமதத்தை ஈடுசெய்யும் வகையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்வு மதியம் 2.30 மணிக்குதொடங்கி 5.30 மணி வரை நடைபெறும்” என்று கூறப்பட்டிருந்தது.
அதன்படி பொதுப் பாடத் தேர்வு மதியம் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இவ்விரு தேர்வுகள் குறித்து பட்டதாரிகளிடம் கேட்டபோது, ‘வினாத்தாள்கள் சற்றுஎளிமையாக இருந்தது. சமீபத்திய நிகழ்வுகள், தமிழகம் தொடர்பான கேள்விகள் அதிகம் இடம்பெற்றன. காலை நடைபெற்ற தேர்வுக் குளறுபடியால் பதற்றம் அடைந்துவிட்டோம். ஒரே நாளில் நடத்தப்படும் இரு தேர்வுகளும் விரித்து எழுதும் வகையில் இருப்பதை வரும் காலத்தில் டிஎன்பிஎஸ்சி மாற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.
உரிய விசாரணை: வழக்கமாக முறையான முன்னேற்பாடுகளுடன் அனைத்து தேர்வுகளையும் நடத்திவரும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் அலட்சியமே இத்தகைய குழப்பங்கள் ஏற்பட காரணம் எனவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்திசம்பந்தபட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தேர்வர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.