ரூ.1 கோடி கேட்டு ரூபா மீது ரோகிணி மானநஷ்ட வழக்கு| Rohini defamation case against Rupa for Rs.1 crore

பெங்களூரு :ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபாவிடம் 1 கோடி ரூபாய் கேட்டு, ஐ.ஏ.எஸ்., ரோகிணி சிந்துாரி, மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார்.கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, அறநிலையத்துறை கமிஷனராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி, 39, மீது, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, 47, தன் முகநுால் பக்கத்தில் 19 குற்றச்சாட்டுகளை கூறினார்.

அவரது அந்தரங்க புகைப்படங்களையும் வெளியிட்டு மாநிலத்தையே அதிர வைத்தார்.
இருவரின் பகிரங்க மோதலால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதற்கிடையே, ரோகிணி பற்றி கருத்துகளை வெளியிட, ரூபாவுக்கு பெங்களூரு 74வது சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்தது.

ஆனாலும், அவர் தொடர்ந்து கருத்துகளை வெளியிடுகிறார். இந்நிலையில், தன்னை பற்றி பொய் தகவல் பரப்பியதால், சமூகத்தில் பெயர் கெட்டு போனதாகவும், இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூபாவுக்கு வக்கீல் வாயிலாக ரோகிணி ‘நோட்டீஸ்’ அனுப்பினார்.

ஆனால், அவர் மன்னிப்பு கேட்கவில்லை.இதையடுத்து, ரோகிணி 1 கோடி ரூபாய் கேட்டு, ரூபா மீது மானநஷ்ட வழக்கு மற்றும் கிரிமினல் வழக்கை, பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. ரோகிணியும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

அவரது வக்கீல் அனில் வாதாடுகையில், ”என் மனுதாரர் மீது, ரூபா பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி உள்ளார். நீதிமன்ற உத்தரவையும் மீறியுள்ளார்,” என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசேகர், ரோகிணியை பார்த்து, ”நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா,” எனக் கேட்டார்.

”என் மீது, பொய்யான குற்றச்சாட்டுகளை ரூபா கூறி உள்ளார். சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்து பரப்புகிறார். என்னை பற்றி கருத்து வெளியிட, நீதிமன்றம் தடை விதித்தும் அதை மீறி நடக்கிறார்,” என்றார்.இதையடுத்து, வழக்கு விசாரணையை இம்மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.