அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்றும் காணொலி மூலம் நடத்திய நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து காணொலி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,கல்வி என்பது நாம் போராடிப் பெற்ற உரிமை. உலக அறிவை வளர்க்கவும், பகுத்தறிவோடு சிந்திக்கவும் கல்வி அறிவு மிகவும் முக்கியம். ஒருவர் வாழ்க்கையில் கற்றுக் கொள்கின்ற கல்வி அவரை என்றைக்கும் கைவிடாது.
குழந்தைகள் பள்ளிகளை நோக்கி வரவேண்டும். கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் நீதிக்கட்சி காலத்தில் இருந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலேயும், தரமான கல்வியைக் கொடுக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அதில் நான் முதல்வன் திட்டம். புதுமைப்பெண் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தொழிற் கல்லூரியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வானவில் மன்றம், அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கென தேன் சிட்டு என்கிற இதழ், நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் அரசின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் தருபவர்கள் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்களின் அளப்பறிய பணி இல்லையெனில், இத்தகைய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டிற்கு வந்திருக்க வாய்ப்பு இல்லை. மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும், ஆசிரியர்கள் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை இந்தக் காணொலி மூலம் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாறி வரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கேற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும். மாணவர் வாழ்க்கை ஏற்றம் காண அயராது உழைக்கும் ஆசிரியப் பெருமக்களின் உடல்நலம் காக்க, அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு 50,000 ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படும். அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இந்தத் திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும், கல்வித் துறையில் தமிழ்நாடு அரசின் லட்சிய இலக்கை அடைவதற்கு துணையாக இருப்பதால், மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு நன்றாக கல்வி கற்று, உயர்க்கல்வியில் பல பல பட்டங்கள் பெற்று உயர்ந்த நிலைக்கு சென்றிட வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.