என்னுடைய பலமே இயக்குநர்கள் தான் – ஐஸ்வர்யா ராஜேஷ்.

'லாக்கப்' படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'சொப்பன சுந்தரி'. இதில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அவருடன் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா வெளியிட்டார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ''கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள் தான். ஒரு இயக்குநர் தான் நடிகர் நடிகைகளை பிரம்மாண்டமாகவும்.. பிரமிப்பாகவும்… காட்சிப்படுத்த முடியும். அந்த வகையில் எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம். இயக்குநர் சார்லஸ், முதலில் இந்தப் படத்தை என்னை நாயகியாக வைத்து இயக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டார். அதன் பிறகு அவரை நான் அழைத்தவுடன் வருகை தந்தார். கோபத்தால் எதுவும் நிகழாது. அதனால் இழப்பு ஏற்படுவது தான் அதிகம். நான் வாழ்க்கையில் நிறைய முறை கோபப்பட்டிருக்கிறேன். அதனால் ஏராளமானவற்றை இழந்திருக்கிறேன்.

ஒரு நடிகர் நட்சத்திர நடிகராக… சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு இயக்குநர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள். அதிலும் நடிகைகளை, கதையின் நாயகியாக நடிக்க வைத்தால்.. அவர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள். எப்படி கொண்டாட வேண்டும் என்பதை இயக்குநர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

'சொப்பன சுந்தரி' படத்தை நான் பார்த்து விட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை என்னவென்றால்… மற்றவர்களை சிரிக்க வைப்பது. கண்ணீர் விட வைப்பது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது என்பது சாதாரண விசயமல்ல. இது சரியாக செய்து விட்டால்.. அவர்களை விட சிறந்த நடிகை வேறு யாரும் இருக்க முடியாது. அதனை இந்தப் படத்தில் நான் முயற்சித்திருக்கிறேன்'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.