புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆளுநர் தமிழிசை..!!

ஆளுநர் தமிழிசை கூறியதாவது,

மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்யும் வகையில், பிரதமரின் ‘மக்கள் மருந்தகம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் குறைவான விலையில் விற்கப்படுகின்றன. இந்த மக்கள் மருந்தகங்களின் பயன்பாடு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் மக்கள் மருந்தகம் தொடங்கப்பட்டு 4-வது ஆண்டு விழாவையொட்டி புதுச்சேரியில் மருந்தியல் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமலு, மருந்து கட்டுப்பாட்டு துறை மருத்துவர் அனந்தகிருஷ்ணன் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “மக்கள் மருந்தகங்களில் கிடைக்கின்ற மருந்துகள் வீரியம் மிகுந்த, சிகிச்சைக்கு உகந்த மருந்துகள். தினமும் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் குளுக்கோ மீட்டர் வெளியே ரூ.1,700-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500-க்கும் மேல் கிடைக்கிறது. ஆனால் மக்கள் மருந்தகத்தில் ரூ.500-க்கு கிடைக்கிறது.

ஜிப்மர் மருத்துவமனையில் சாமானிய மக்கள் மருந்து வாங்க சிரமப்படுகிறார்கள் என்பது தெரியும். எனவே அங்கு ஏற்கனவே மக்கள் மருந்தகம் வைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து, இயக்குநரிடம் சொல்லியிருந்தோம். அதற்கான அடிப்படை வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது. இன்னும், மூன்று வாரங்களில் திறக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஜிப்மர் மருத்துவமனையில் மக்கள் மருந்தகம் திறக்கப்படும். புதுச்சேரியில் ஆரம்ப சுகாதார மையங்களில் ஏற்கனவே இலவச மருந்துகள் கொடுக்கின்றோம்.

ஆனால் அதையும் தாண்டி சில சிறப்பு மருத்துவத்துக்கு சிறப்பு மருந்துகள் தேவைப்படும். எனவே எங்கெல்லாம் ஆரம்ப சுகாதார மையங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் மருந்தகம் திறக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலரிடம் கூறியுள்ளேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.