எட்டு வயதில் தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் : குஷ்பு அதிர்ச்சி தகவல்

நடிகை குஷ்பு எண்பதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் வரை ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பிறகு இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்துகொண்டு குடும்ப பொறுப்புகளை கவனித்து வந்தவர், ஒரு கட்டத்தில் அரசியலிலும் நுழைந்து தற்போது பா.ஜ. கட்சியில் முக்கிய பொறுப்பு வைத்து வருகிறார். தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவராக குஷ்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு தரும் விஷயங்களை தொடர்ந்து பேசி வருகிறார்.. சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையத்தில் முக்கிய பொறுப்பு குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியில் பள்ளி மாணவிகள் மத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு மாணவிகள் எதிர்கொள்ள வேண்டிய பாலியல் ரீதியான சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார். அதுமட்டுமல்ல தன்னுடைய எட்டு வயதிலேயே தனது தந்தை மூலமாக பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக கூறி ஒரு அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார்.

இது பற்றி அவர் கூறும்போது, “மனைவி, குழந்தைகளை அடிக்கலாம்.. சொந்த மகளையே பாலியல் ரீதியாக துன்புறுத்தலாம் என்பதை தனது உரிமையாகவே நினைத்துக் கொண்ட ஒரு மனிதர் தான் என்னுடைய தந்தை. எட்டு வயதில் இருந்து அவரது பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். ஆனால் 15 வயதில் தான் என்னால் அவரை எதிர்த்து குரல் கொடுக்க முடிந்தது. காரணம் என்னுடைய அம்மாவின் திருமணமே ஒரு துரதிஷ்டவசமான திருமணம் என்றாலும், கணவன் என்றால் கடவுள் என்பது போல அந்த சூழலில் எண்ணிக் கொண்டிருந்தவர் எனது அம்மா. அவரிடம் நான் இது பற்றி கூறினால் அவர் என்னை நம்ப மாட்டாரோ என்று கூட நினைத்தேன்.

ஆனால் பேச வேண்டிய சரியான தருணம் வந்ததும் அது குறித்து தைரியமாக பேசினேன். இதைத்தொடர்ந்து எங்கள் குடும்பத்தை அப்படியே அம்போவென விட்டுவிட்டு என் தந்தை வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என தெரியாத சூழலில், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தோம்” என்று கூறினார்.

அதுமட்டுமல்ல பிரபலமான கட்சி ஒன்றில் தான் பொறுப்பு வகித்த சமயத்தில் வெளி மாநிலம் ஒன்றில் நடந்த கூட்டத்திற்காக சென்றபோது அங்கிருந்த கான்பரன்ஸ் ஹால் ஒன்றில் தன்னைத் தவிர அனைவரும் ஆண்கள் தான் இருந்தார்கள் என்றும் அதில் அமைச்சர்களாக இருந்த இரண்டு பேர் ஒரு பெண் இருக்கிறார் என்றும் பாராமல் தங்களது ஆடைகளை அந்த இடத்திலேயே மாற்றினார்கள் என்றும் அது குறித்து தனது ஆட்சேபனையை அப்போதே அவர்களிடம் கடுமையாக தெரிவித்தேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் குஷ்பு.

பள்ளி மாணவிகளுக்கு இந்த இளம் வயதில் எந்தவிதமான பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டாலும் அவர்கள் தைரியமாக அதை வெளியில் சொல்ல முன்வர வேண்டும் என்பதற்காகவே அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.