டோக்கியோ, ஜப்பானில், மிக வேகமாக குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கப்படவில்லை எனில், இந்த நாடே மாயமாகிவிடும் அபாயம் இருப்பதாக, பிரதமர் புமியோ கிஷிடாவின் ஆலோசகர் தெரிவித்தார்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் குழந்தை பிறப்பு விகிதம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக சரிந்து வருகிறது. கடந்த ஆண்டு, 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், குழந்தை பிறப்பு 8 லட்சமாக உள்ளது.
குழந்தை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்வதற்காக, குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்காக அரசு செலவிடும் நிதியை இரட்டிப்பாக்க அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா முடிவு செய்துள்ளார்.
உலகிலேயே குழந்தை பிறப்பு மிகவும் குறைவாக உள்ள நாடாக தென் கொரியா உள்ளது.
இந்த வரிசையில் ஜப்பானின் மக்கள் தொகை மிக வேகமாக சுருங்கி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த, 2008ல் 12 கோடியே 80 லட்சமாக இருந்த மக்கள் தொகை, தற்போது 12 கோடியே 46 லட்சமாக குறைந்துள்ளது. நாட்டில், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 29 சதவீதமாக உள்ளது.
இந்த நிலைமை குறித்து பிரதமரின் ஆலோசகர் மசாகோ மோரி கூறியதாவது:
ஜப்பானின் பிறப்பு விகிதம் படிப்படியாக குறையவில்லை. அது மிக வேகமான சரிவை சந்தித்து வருகிறது.
இந்த நிலை தொடர்ந்தால், இன்றைக்கு பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிதைந்து சுருங்கிய, செயல்படும் திறனை இழந்த சமூகத்தில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலை நீடித்தால் நம் நாடே எதிர்காலத்தில் மாயமாக மறைந்துவிடும் அபாயம் உள்ளது.
சமூக பாதுகாப்பு சீர்குலையும், தொழில்துறை மற்றும் பொருளாதார நிலை வீழ்ச்சி அடையும். நாட்டை பாதுகாக்க, நம் படைகளுக்கு போதிய வீரர்கள் இருக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்