பாட்னா: வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக கூறி 42 போலி வீடியோக்களை பகிர்ந்தவரை பீகாரில் போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களில் சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் பீகார் உள்பட வடமாநிலங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு,’ சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ போலியானது’ என்று விளக்கம் அளித்தார். இதுபற்றி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோரும் கவலை தெரிவித்ததோடு போலி வீடியோ பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட ஒருவரை பீகார் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து பீகார் போலீஸ் ஏடிஜிபி ஜிதேந்திர சிங் கங்க்வார் கூறியதாவது:
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ பரப்பிய பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டம் லட்சுமிபூர் பகுதியை சேர்ந்த அமன்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ராகேஷ் திவாரி, யுவராஜ்சிங் ராஜ்புத், மணீஷ் காசியாப் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் நடந்ததாக வெளியான 2 வீடியோக்களும் தவறானவை. ஒன்று வடமாநில தொழிலாளர்களின் இரு குழுக்களிடையே மோதல், மற்றொன்று கோயம்புத்தூரில் உள்ள இரு உள்ளூர்வாசிகளுக்கு இடையேயான மோதல் ஆகும். இதைத்தான் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரப்பி விட்டுள்ளனர்.
வதந்திகளுக்காக பதிவை உருவாக்கி பகிர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதுகுறித்து 10 பேர் கொண்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்ட அமன் குமார் போனில் இருந்து இதுபோன்ற பல வீடியோக்கள் கிடைத்துள்ளன. 42க்கும் மேற்பட்ட வீடியோக்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோக்களை சேமித்து வைப்பது தொடர்பாக பேஸ்புக், யூடியூப், ஜி மெயில் ஆகியவற்றிற்கு வேண்டுகோள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் 9 வீடியோ, டிவிட்டர், யூடியூப்பில் தலா 15 வீடியோ, ஜி மெயிலில் 3 வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. அவை பற்றி விசாரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 மாதங்களுக்கு அதை நீக்க முடியாது. இதனால் முழுமையான விசாரணை செய்ய முடியும். ஏனெனில் இந்த வீடியோ வேண்டுமென்றே பொதுமக்கள் மத்தியில் விஷமப்பிரச்சாரம் செய்ய உருவாக்கப்பட்டது. இந்த வீடியோ காரணமாக மோசமான சூழ்நிலைகள் இருமாநிலத்திலும் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி மேலும் விசாரிக்க ஒரு டிஎஸ்பி, 4 போலீசார் தற்போது தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வதந்தி பரப்பிய பாஜ செய்தி தொடர்பாளர் முன்ஜாமீன் கேட்டு மனு
தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய உத்தரப் பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அவரை கைது செய்ய திருச்செந்தூர் டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி சென்றுள்ளனர். இந்த நிலையில், பிரசாந்த் குமார் உம்ராவ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தனக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.