தெரு நாய் விரட்டியதில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண்… அதிர்ச்சி வீடியோ..!!

சென்னை குரோம்பேட்டை 26வது வார்டு காந்தி நகரில் சில நாள்களுக்கு முன்பு தேன்மொழி (55) என்ற பெண் மகன் உடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் இருசக்கர வாகனத்தை அங்கிருந்த தெரு நாய்கள் விரட்டி உள்ளன.

இதனால் தேன்மொழியின் மகன் வேகமாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தேன்மொழி தவறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு குவிந்த குடியிருப்பு வாசிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மார்ச் 5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை, எப்போதும் இல்லாத அளவிற்கு பெருகி விட்டது. ஒவ்வொரு தெருவிலும், குறைந்த பட்சம் 10 முதல் 15 நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி கடிப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நாய்கள் விரட்டும் போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைகின்றனர். பள்ளிக் குழந்தைகளும் தனியாக நடந்து செல்ல முடிவதில்லை.

ஏதாவது, அசாம்பாவிதம் ஏற்பட்டால் மட்டுமே தெரு நாய்களை பிடிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துகிறது. அதன்பின் கண்டுக்கொள்வதில்லை. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு நாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டதால், அவற்றை கட்டுப்படுத்த மநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக, ஜனவரி மாதம் தாம்பரம் மாநகராட்சி 25வது வார்டு, குரோம்பேட்டை சுபாஷ் நகர் விஸ்வேஸ்வரன் தெருவில், டியூசன் முடிந்து சகோதரியுடன் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்ச ப்ளஸ்-1 மாணவியை வெறிபிடித்த தெரு நாய் ஒன்று விடாமல் துரத்தியதில், அவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அப்போதில் இருந்து மக்கள் நாய்களை விரட்டியடிக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.