பெங்களூரு: லஞ்ச வழக்கில் தலைமறைவாக உள்ள, பா.ஜ., – எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா, முன்ஜாமின் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க, நீதிபதி நடராஜன் மறுத்து விட்டார்.
மாடாலை கைது செய்ய லோக் ஆயுக்தா போலீசார், ‘மாஸ்டர் பிளான்’ வகுத்துள்ளனர். ”அவர் விரைவில் கைது செய்யப்படுவார்,” என, முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறி இருக்கிறார்.
தாவணகெரே மாவட்டம், சென்னகிரி பா.ஜ., – எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா, 70; கர்நாடகா அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவன தலைவராக இருந்தார்.
இந்த நிறுவனத்திற்கு ரசாயனம் வினியோகம் செய்யும் டெண்டர் வழங்குவதற்காக, ஸ்ரேயாஸ் என்பவரிடம், விருபாக் ஷப்பாவின் மகன் பிரசாந்த், 81 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.
முதல் தவணையாக, 40 லட்சம் ரூபாய் வாங்கும் போது, பிரசாந்த் உட்பட ஐந்து பேரை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
மாடால் விருபாக் ஷப்பா தலைமறைவாகி விட்டார். ஆறு நாட்களாக அவரது மொபைல் போன், ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய மூன்று டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடக்கவில்லை. இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராக அவருக்கு, லோக் ஆயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். நேற்று ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் வரவில்லை.
இந்நிலையில், மாடால் விருபாக் ஷப்பா சார்பில், அவரது வக்கீலான சந்தீப் பாட்டீல், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். ‘மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்’ எனவும் கேட்டுக் கொண்டார்.
நீதிபதி நடராஜன், ”அவசரமாக விசாரிக்க வேண்டிய நிலையில், இந்த மனு இல்லை,” எனக் கூறி மறுத்து விட்டார். இன்று விசாரிப்பதாக அறிவித்தார்.
இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரசாந்த் உட்பட ஐந்து பேரை, தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நேற்று லோக் ஆயுக்தா போலீசார், மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதும் இன்று விசாரணை நடக்கிறது.
தலைமறைவாக இருந்து, கண்ணாமூச்சி காட்டி வரும் மாடால் விருபாக் ஷப்பாவை கைது செய்ய, லோக் ஆயுக்தா போலீசார் ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றை தீட்டி உள்ளனர்.
அதாவது இனி விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு, நோட்டீஸ் அனுப்பக் கூடாது என முடிவு செய்து உள்ளனர். நோட்டீஸ் அனுப்பினால் அவர் ஆஜராக மாட்டார். ஒரு வேளை ஆஜர் ஆனாலும், மூன்று நாள் விசாரணைக்கு பின்னரே, அவரை கைது செய்ய முடியும்.
இந்த மூன்று நாட்களில் அவர் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு இருப்பதாக, போலீசார் கருதுகின்றனர். இதனால், அவரை நேரடியாக கைது செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளனர். அவர் வெளிநாட்டிற்கு தப்பி விடாமல் இருக்க, ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அதாவது தேடப்படும் நபராக அறிவிக்கவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில், நேற்று கலபுரகியில் பேட்டி அளித்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ”தலைமறைவாக உள்ள மாடால் விருபாக் ஷப்பா இன்று அல்லது நாளைக்குள் கைது செய்யப்படுவார்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்