லிபியாவில் சிக்கித் தவித்த 12 இந்தியர்கள் மீட்பு: அனைவரும் டெல்லி திரும்பினர்

புதுடெல்லி: லிபியாவுக்கு சட்ட விரோதமாக அழைத்து செல்லப்பட்ட பஞ்சாபை சேர்ந்த 12 பேர் பத்திரமாக நாடு திரும்பினர்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 12 பேருக்கு லிபியா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களை முகவர் ஒருவர் அழைத்து சென்றார். சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட அவர்கள், அங்கு போனவுடன் தனியார் நிறுவனங்களில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அங்கு அவர்கள் கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். உணவு உள்ளிட்ட தேவைகள் கூட பூர்த்தி செய்து தரப்படவில்லை.

தட்டி கேட்டதால், அவர்கள் அடித்து சித்ரவதை செய்யப்பட்டனர். கடந்த 2 மாதங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்த அவர்களின் பஞ்சாப் உறவினர்கள், தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இக்பால்சிங் லால்புராவிடம் புகார் மனு அளித்தனர். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தொடர் நடவடிக்கையால், துனிஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவி நாடப்பட்டது. தூதரகத்தின் உதவியால், முதலில் 4 பேர், அடுத்தபடியாக 8 பேர் என பஞ்சாப்பை சேர்ந்த 12 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு டெல்லி அழைத்துவரப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.