வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்து ஆன்லைன் மோசடியால் ரூ.57 ஆயிரம் இழந்த நடிகை

மும்பை: வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்து ஆன்லைனில் ரூ. 57 ஆயிரம் இழந்த நடிகை ஸ்வேதா மேமன், இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் பணமோசடி அதிகரித்து வரும்நிலையில் ‘பான்’ எண் புதுப்பித்தல் உள்ளிட்ட காரணங்களால் வங்கிக் கணக்கில் பணம் இழந்த 40 பேர் மும்பை போலீசில் புகார் அளித்தனர். மேற்கண்ட 40 பேரில் தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா மேமனும் ஒருவராவார். இதுகுறித்து ஸ்வேதா மேமன் போலீசில் அளித்த புகாரில், ‘நான் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஒரு போன் அழைப்பு வந்தது. தொடர்ந்து அந்த போன் அழைப்பில் இருந்து எஸ்எம்எஸ் வந்தது.

அந்த எஸ்எம்எஸ் லிங்கை கிளிக் செய்தவுடன், அந்த லிங்கில் கேட்கப்பட்ட ஐடி எண், பாஸ்வேர்ட் எண் மற்றும் ஓடிபி எண் ஆகியவற்றை போர்ட்டலில் டைப் செய்தேன். அடுத்த சில நிமிடங்களில் எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.57,636 எடுக்கப்பட்டது. ஆனால் உண்மையில் வங்கியில் இருந்து எனக்கு போன் அழைப்பு வரவில்லை. ஆன்லைன் பணமோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து மும்பை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.