மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 238வது நாளாக 100 அடிக்கும் கீழ் குறையாமல் தொடர்கிறது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 120 அடியிலிருந்து படிப்படியாக குறைந்தது.
டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கடந்த ஜனவரி 28ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. அப்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 103.87 அடியாக இருந்தது. தற்போது குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நீர் வரத்தும் திறப்பும் சீராக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறையாமல் உள்ளது. இன்று 238வது நாளாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் தொடர்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 103.52 அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 1212 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 1224 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 69.48 டி.எம்.சியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் இதேநிலையில் தொடரும் பட்சத்தில் வரும் பாசன ஆண்டிற்கு குறிப்பிட்ட ஜூன் 12ம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 1500 கனஅடியாக நீடிக்கிறது.