கோவை போலீசார் மீது துப்பாக்கிச்சூடு: ரவுடி சஞ்சய் ராஜா சிக்கியது எப்படி?

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சத்தியபாண்டி. இவர் கோவையில் தங்கி கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். இந்த சூழலில் கடந்த 2020ஆம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் சத்தியபாண்டி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

கட்டம் கட்டிய ரவுடி கும்பல்

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சத்தியபாண்டிக்கு மற்றொரு ரவுடி கும்பல் கட்டம் கட்டியது. இருதரப்பிற்கும் இருந்த முன்விரோதம் காரணமாக கொலை செய்ய திட்டமிட்டது. இதையொட்டி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சத்தியபாண்டியை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாள் போன்ற ஆயுதங்களால் துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தினர். அதில் சத்தியபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார்

இந்த கொலை வழக்கில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகியோர் சென்னை அரக்கோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சத்தியபாண்டி கொலை விவகாரத்தில் சஞ்சய் ராஜா என்பவர் மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

சஞ்சய் ராஜா சரண்

இவரை கோவை மற்றும் கர்நாடக பகுதிகளில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சஞ்சய் ராஜா சரணடைந்தார். பின்னர் அவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மும்முரம் காட்டினர்.

அதிரடி வாக்குமூலம்

இதற்கிடையில் சத்தியபாண்டி கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தான் எடுத்து தருவதாக சஞ்சய் ராஜா வாக்குமூலம் அளித்தார். உடனே துப்பாக்கியை எடுக்க கோவை கரட்டுமேடு பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகில் இன்று (மார்ச் 7) காலை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணலீலாவை சஞ்சய் ராஜா திடீரென சுட்டார்.

திடீர் துப்பாக்கிச்சூடு

ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆய்வாளர் கிருஷ்ணலீலா தப்பினார். அங்கிருந்த மரத்தின் பின்னால் போலீசார் மறைந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தற்காத்துக் கொள்ள சஞ்சய் ராஜாவின் இடது கால் முட்டியின் கீழ் துப்பாக்கியால் சுட்டார். அதில் படுகாயம் அடைந்த சஞ்சய் ராஜா கீழே விழுந்தார்.

சுட்டு பிடித்த போலீஸ்

அப்போது அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கீழே தவறவிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு தோட்டாவை அகற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சஞ்சய் ராஜா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.