இத்தாலியில், ரோம் நகர் அருகே விமானப்படை வீரர்கள் விமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, நடுவானில் பறந்துகொண்டிருந்த இரண்டு பயிற்சி விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில், விமானங்களிலிருந்த விமானிகள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து வெளியான தகவலின்படி, இன்று நண்பகல் நேரத்தில், ரோமின் வடகிழக்கே 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Guidonia Montecelio நகரில், ஒற்றை இன்ஜின் கொண்ட இரண்டு U-208 ரக விமானங்கள் வானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.
அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு விமானங்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. ஒரு விமானம், Guidonia விமான தளத்தில் விழுந்து தீப்பிடித்து நொறுங்கியது. மற்றொன்று Colfiorito பகுதியில் கார் ஒன்றின்மீது விழுந்து தீப்பிடித்தது. இதில், இரண்டு விமானங்களிலும் இருந்த இரண்டு விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni), உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினருக்கும், விமானப்படையினருக்கும் அரசு சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.