கையில் கத்தி, வாயில் வைக்காத சிகரெட் என்று மிரட்டல் பாடலுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட கோவை இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு யூட்யூப் ஷார்ட்ஸ், பேஸ்புக்-இன்ஸ்டாகிராம் ரீல் போன்றவற்றில் இளைய தலைமுறை வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

பலர் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தியும். சிலர் சமூக கருத்துக்களை தெரிவித்தும், இருக்கும் 60 நொடியில் ஒரு கதையை கூறியும், பல தகவல்களை தெரிவித்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதே சமயத்தில் டிக் டாக் செயலி எதற்காக தடை செய்யப்பட்டதோ, அது போன்ற காரணங்களையும் இந்த ஷார்ட்ஸ், ரீல் போன்றவற்றில் வீடியோவாக வெளியிட்டு வருவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீலில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இளைஞர்கள் சிலர் வீடியோக்களை வெளியிட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மன்னிப்பு கோரி வெளியிடும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.
அந்த வகையில், தற்போது போலீஸ் தனிப்பட்டை அமைத்து தேடும் அளவுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கோவையை சேர்ந்த இளம்பெண்.

கோவையை சேர்ந்த வினோதினி என்ற 25 வயது இளம் பெண், இன்ஸ்டாகிராம் ரீலில் ஒரு கையில் கத்தி மற்றொரு கையில் சிகரெட் உடன், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்ந்து பல வீடியோக்களை இவர் இதே போல் வெளியிட்டு வந்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வினோதினி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.