பாலக்கோடு: பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்தன. தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உணவு தேடி வந்த ஒரு ஆண் யானை, 2 பெண் யானைகள், 2 குட்டி யானை என 5 யானைகள் கடந்த ஒரு மாதமாக சுற்றி வந்தன. இவை இரவு நேரங்களில் விளைநிலங்களுக்கு சென்று பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வந்தன. இந்நிலையில், மாரண்டஹள்ளி அடுத்த காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் (50), 2 ஏக்கர் நிலத்தில் சோளம், ராகி சாகுபடி செய்துள்ளார். யானை, காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருட்டுத்தனமாக எடுத்திருந்ததாக தெரிகிறது.
இதனிடையே அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 5 யானைகளும் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் முருகேசனின் விளைநிலத்திற்கு வந்துள்ளது. அப்போது மின்வேலியில் சிக்கியதில் 2 பெண் யானைகள், ஒரு ஆண் யானை மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்து உயிரிழந்தன. 2 குட்டி யானைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. தகவலறிந்து பாலக்கோடு வனத்துறையினர் யானைகளின் உடல்களை மீட்டு, சட்டவிரோதமாக மின்கம்பி அமைத்த முருகேசனை கைது செய்தனர். யானைகள் இறந்த தகவலறிந்து அப்பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
* பாசப்போராட்டம் உயிரிழந்த பெண் யானைகள் மற்றும் ஆண் யானைக்கு 40 வயது இருக்கும். நேற்று காலை முதலே உயிரிழந்த யானைகள் உடல் அருகே 2 குட்டி யானைகளும் சுற்றி சுற்றி வந்தன. இதனால், இறந்த யானைகளின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் 2 குட்டி யானைகளையும் விலக்கிவிட்டு உயிரிழந்த 3 யானைகளின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு பின் அங்கேயே புதைத்தனர். அங்கு பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
* ஐகோர்ட்டில் முறையீடு உயிர் தப்பிய குட்டி யானைகளை காட்டுக்குள் விட நடவடிக்கை எடுக்கும்படி கோரி விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி தமிழ்நாடு வனத்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்திருந்த விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு குட்டிகளை வனத்துறையினர் பாதுகாத்து, பராமரிக்க, உணவளிக்க ஒசூர் கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் 10 வனத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், குட்டி யானைகளை கூட்டத்துடன் சேர்க்க ஒரு மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, விசாரணையை வனபாதுபாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றினர்.