பீஜிங் ”சீனாவின் வளர்ச்சியை ஒடுக்க, மேற்கத்திய நாடுகளை வழிநடத்தும் அமெரிக்காவின் செயலால், நாட்டின் வளர்ச்சியில் முன் எப்போதும் இல்லாத சவால்களை சந்தித்து வருகிறோம்,” என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்தார்.
சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக போர் தொடர்ந்து வரும் நிலையில், ‘ஹுவாய்’ உள்ளிட்ட சீன தொழில்நுட்ப நிறுவனங்களை முடக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கி உள்ளது.
அமெரிக்க அரசு அதிகாரிகள் தங்கள், ‘மொபைல் போன்’களில் சீனாவுக்கு சொந்தமான, ‘டிக் டாக்’ செயலியை வைத்துக் கொள்ள அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சீன பார்லிமென்ட் குழுவின் ஆண்டுக் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கான வெளிப்புற சூழல் வேகமாக மாறி வருகிறது.
நிச்சயமற்ற தன்மை மற்றும் கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. எதிர்காலத்தில் நாம் சந்திக்கும் சவால்களும், அபாயங்களும் மிக கடுமையாக மாறும்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழலில் சிக்கலான மாற்றங்களை எதிர்கொள்ளும்போதுநாம் அமைதியாக இருக்க வேண்டும், ஸ்திரத்தன்மையைப் பேண வேண்டும், முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும், ஒன்றுபட்டு போராட துணிய வேண்டும்.
சீனாவை ஒடுக்குவதற்கான பணியில் மேற்கத்திய நாடுகளை அமெரிக்கா வழிநடத்துகிறது. இது நாட்டின் வளர்ச்சியில் முன் எப்போதும் சந்தித்திடாத சவால்களையும், நெருக்கடிகளையும் அளித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement