அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது

அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், பாஜகவில் இருந்து விலகியவர்களை அதிமுகவில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூட்டணி தர்மத்தை மீறியதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பாஜகவினர் கடந்த இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “கல் வீசினால் உடைய அதிமுக கண்ணாடி இல்லை. அதிமுக என்பது கடல். கடலில் கல் வீசினால் கல்தான் காணாமல் போகும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சியுடன் உள்ள காரணத்தால், விருப்பப்பட்டு அதிமுகவில் இணைகின்றனர். இதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் அரசியல் கட்சி தலைவருக்கு இருக்க வேண்டும். அண்ணாமலைக்கும் இருக்க வேண்டும். அதிமுக அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு இருப்பதால், அனைவரும் வந்து இணைகின்றனர். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது.

எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜகவினர் எரிப்பது போன்ற நிகழ்வுகளை அக்கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டுள்ளது. அவர்கள் கிளர்ந்து எழுந்தால் என்ன ஆகும்” என்று தெரிவித்தார்.

குறிப்பாக நான் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று அண்ணாமலை கூறியது தொடர்பாக பேசிய ஜெயக்குமார், “அண்ணாமலை எப்படி தலைவர் ஆனார் என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், நான் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்லக்கூடாது. ஜெயலலிதா மாதிரி ஒரு தலைவர் இனி பிறக்கப்போவது இல்லை” என்று தெரிவித்தார்.

பாஜக, அதிமுக இடையில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் கூட்டணியை பாதிக்குமா என்ற கேள்விக்கு, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட இருவரும் கூறியுள்ளனர் என்றார்.

கடந்த நான்காண்டு அதிமுக ஆட்சி 420 (மோசடி) ஆட்சி என்று பாஜக நிர்வாகி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், “தலைவர்கள் கூறும் கருத்துகளுக்கு மட்டுமே பதில் அளிப்பேன். மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.