ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்; திருப்பியனுப்பிய ஆளுநர் – மீண்டும் சட்டமியற்ற அமைச்சரவை முடிவு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானம், ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அது தொடர்பாக ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தெளிவான பதிலை தமிழ்நாடு அரசும் வழங்கியது. ஆனால், கடந்த 6-ம் தேதி ஆன்லைன் விளையாட்டுத் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் ஆளுநரால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளானது.

இந்த நிலையில், மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட முன்வடிவை இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவர, இன்று தலைமைச் செயலகத்தில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

ஆளுநர் ஆர்.என் ரவி

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் 12 பேர் மரணமடைந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி `ஆன்லைன் விளையாட்டைத் தடைசெய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை’ எனக் கூறி சட்டவரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆனால், நீதிமன்றம் சட்டமியற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதை உறுதிசெய்திருக்கிறது. மேலும், நீதியரசர் சந்துரு தலைமையில் ஆணையம் அமைத்து மக்கள் கருத்துகளைக் கேட்ட பிறகுதான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சாசனத்தின் 7-வது அட்டவணையிலுள்ள பட்டியலில் கூறப்பட்டிருக்கும் உள்ளீடுகளைக் கருத்தில் கொண்டுதான் உருவாக்கப்பட்டது.

ஆனால், ஆளுநர் பிரிவு- 31 திறமைக்கான விளையாட்டைக் (Skilled Games) குறிப்பிட்டு இது மத்திய அரசின் பட்டியலின்கீழ் வருவதாகவும், அதனால் மாநில அரசு சட்டமியற்ற அதிகாரமில்லை எனவும் கூறி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்

நேரில் (ஆஃப்லைனில்) விளையாடும்போது யாருடன், எவ்வாறு விளையாடுகிறோம் என்பது தெரிந்து விளையாட வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஆன்லைனில் (இணைய வழியில்) விளையாடும்போது, அந்த விளையாட்டை உருவாக்கியவர் பதிவுசெய்யும் செயல்திட்டத்தின் (புரோகிராம்) அடிப்படையில் விளையாடப்படுவதால், ஏமாற்றும் மற்றும் பணத்தை சுரண்டும் வாய்ப்புகள் அதிகம். எனவே, சூதாட்டம் என்கிற அடிப்படையில் அரசியலமைப்பு சாசனத்தின் 34-ம் பிரிவுக்கு உட்பட்டுதான் இந்த சட்ட முன்வடிவு அமைந்திருக்கிறது.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்

பந்தயம் மற்றும் சூதாட்டம், பொது அமைதி, பொது சுகாதாரம் போன்ற அம்சங்கள் அனைத்தும் மாநிலப் பட்டியலின்கீழ் இருக்கின்றன. அதனடிப்படையில்தான் இந்தச் சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.

எனவே, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப மீண்டும் ஆன்லைன் விளையாட்டுத் தடைச் சட்ட முன்வடிவைக் கொண்டுவர அமைச்சரவைக் கூட்டம் முடிவுசெய்திருக்கிறது. அவ்வாறு அனுப்பப்படும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசு முடிவு செய்யும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.