சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரகாஷுக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி காலை, பிரகாஷ் தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் பெரியமேட்டிலுள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். பின்னர் இருவரும் மது அருந்திவிட்டு, தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரவு நேரத்தில், பிரகாஷ் உடன் வந்த பெண், விடுதி மேலாளரிடம் பதற்றத்துடன் சென்று, `என்னுடன் வந்த நபர் இறந்துவிட்டார்’ எனக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விடுதி மேலாளர், உடனே இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்திருக்கிறார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பிரகாஷின் சடலத்தைக் கைப்பற்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பெரியமேடு போலீஸார் பிரகாஷ் உடன் வந்த பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி இரு மகன்கள் இருப்பதும், அவர் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
5 வருடங்களுக்கு முன்பு அப்பள கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும்போது, அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த பிரகாஷுடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இருவரும் நெருங்கிப் பழகிவந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் தொடர்பைத் துண்டித்துக் கொண்ட நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்திருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று பெரியமேட்டில் அறை எடுத்துத் தங்கியிருந்த போதுதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது `பகீர்’ தகவலைக் கூறியிருக்கிறார்.

“நாங்கள் இருவரும் நெருங்கிப் பழகி வந்தோம். இந்த நிலையில், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுதான் அறை எடுத்துத் தங்கினோம். பின்னர் அந்த முடிவைக் கைவிட்டு, நான் தூங்கிவிட்டேன். ஆனால், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்” எனக் கூறியிருக்கிறார் அந்தப் பெண். ஆனால், பிரகாஷ் தூக்க மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதனால், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்கின்றனர் போலீஸார்.