ஹைதராபாத்: டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ரூ. 100 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த வழக்கில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் அமித் அரோரா கைது செய்யப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணையில், ‘சவுத் குரூப்’ என்கிற நிறுவனம் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பலருக்கு மதுபானக் கொள்கை தொடர்பாக லஞ்சம் வழங்கியதை ஒப்புக்கொண்டார். இந்த ‘சவுத் குரூப்’ நிறுவனம், தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா, தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. மாகுண்டா ஸ்ரீநிவாஸ் ரெட்டியின் மகன் ராகவ் மாகுண்டா, சரத் ரெட்டி, அபிஷேக், புச்சிபாபு ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பது விசார ணையில் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் எம்எல்சி கவிதாவின் பெயர் குற்றப் பத்திரிகையில் 28 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இது தொடர் பாக கவிதாவிடம் அவரது வீட் டிலேயே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் டெல்லியில் அமலாக்கத் துறை அலுவலகத் தில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கவிதாவுடன் இவ்வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட அருண் ராமசந்திர பிள்ளையிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இவர் கவிதாவின் பினாமி என அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதனிடையே கவிதா தரப்பில் அமலாக்க துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி ஜந்தர்
மந்தர் பகுதியில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) போராட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இருப்பதால் 15-ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு வரத் தயார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போராட்டத்தில் கலந்து கொள்ள கவிதா நேற்று மாலை 6 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக கவிதாவுடன் அவரது தந்தையும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், “நீ தைரியமாக டெல்லி சென்று மகளிர் இடஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்து. விபரீதம் நடந்தால் சட்டப்படி பார்த்துக்கொள் ளலாம்” என கூறியதாக தெரிகிறது.
ஆஜரான 11 பேரும் கைது: இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகாத கவிதாவை அமலாக்கத் துறையினர் டெல்லியில் எந்நேரமும் கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜரான 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.