திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி நிகழ்ச்சி கோலாகலம்: ஆடுகளின் ரத்தத்தை உறிஞ்சி மெய்சிலிர்க்க வைத்த மருளாளி

திருச்சி: திருச்சி வயலூர் சாலை உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் பிரசித்தி பெற்ற புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 22ம் தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 6ம் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு சுத்தபூஜை நடந்தது. அம்மன் ஓலைபிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.

தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் வீடுகள் தோறும் தேங்காய், பழம், பூ சாற்றி வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் நிகழ்ச்சி இன்று(9ம் தேதி) காலை புத்தூர் மந்தையில் நடைபெற்றது. காலையில் இருந்தே பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக ஆடுகளுடன் வரத்தொடங்கினர். நேரம் ஆக, ஆக ஏராளமான பக்தர்கள் ஆடுகளுடன் குவிந்தனர். காலை 10 மணி அளவில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. பக்தர்களின் தோள் மீது அமர்ந்தபடி மருளாளி சிவக்குமார் ஊர்வலமாக வந்தார்.

அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்த ஆடுகளை வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர். மந்தைக்கு முன்புள்ள தேரின் அருகில் மருளாளி சிவக்குமார் வந்ததும், கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட ஆடுகள் மருளாளியிடம் தூக்கி கொடுக்கப்பட்டன. அவர் ஆடுகளின் ரத்தத்தை ஆக்ரோஷமாக உறிஞ்சி குடித்தார். இவ்விழாவில், அரசு சார்பில் ஆட்டுக் குட்டிகள் கொடுப்பது தொன்று தொட்ட வழக்கமாக இருக்கிறது. அதன்படி, அரசு சார்பில், திருச்சி மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட ஆட்டு குட்டியின் ரத்தத்தை மருளாளி முதலில் குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

மருளாளி ஆடுகளின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்த காட்சிகள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து 800க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.
முன்னதாக ஓலைப்பிடாரியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மனை வைத்து புத்தூர் அக்ரகாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக குட்டி குடித்தல் விழா நடந்த மந்தைக்கு அழைத்து வந்தனர். விழாவை முன்னிட்டு புத்தூர் நால்ரோடு முதல் கோயில் வரை சாலையின் இருபுறமும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. நாளை மஞ்சள் நீராட்டு விழா, நாளை மறுநாள் அம்மன் குடிபுகுதல் நடக்கிறது.

இந்த குட்டி குடித்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குட்டிக் குடித்தல் நிகழ்ச்சியையொட்டி, புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகள் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.