புதுடெல்லி: திரிபுரா மாநிலத்தில் 2-வது முறையாக பாஜக சார்பில் மாணிக் சாஹா முதல்வராகப் பதவியேற்றார்.
வடகிழக்கு மாநிலமான திரிபுரா இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்பட்டது. அங்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சி காலம் முடிவடையும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி பலம் வாய்ந்ததாக இருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் வெளியாயின. மேலும், அரசு வம்சத்தை சேர்ந்த பிரத்யோத் கிஷோர் தெபர்மா தலைமையிலான திப்ரா மோதா கட்சியும் கடும் போட்டியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி ஒரு இடத்தில் வென்றது. திப்ரா மோதா கட்சி பிரத்யோத் கிஷோர் உட்பட 14 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி 14 இடங்களில் வென்றது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில், மாணிக் சாஹா (69) ஒருமனதாக மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, திரிபுராவின் அகர்தலாவில் நேற்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதல்வராக 2-வது முறை மாணிக் சாஹா பதவியேற்றார். அவருடன் பெண் ஒருவர் உட்பட 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அனைவருக்கும் ஆளுநர் சத்யதேவ் நாராயண் அரயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
எனினும் 3 கேபினட் அமைச்சர் பதவிகள் காலியாக வைக்கப் பட்டுள்ளன. திப்ரா மோதா கட்சித் தலைவர் பிரத்யோத் கிஷோர் தெபர்மா பாஜக அரசில் இடம்பெற விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அவர் 13 எம்எல்ஏ.க்களுடன் சென்று அகர்தலாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதன்பின் ஆட்சியில் திப்ரா மோதா பங்கேற்றால் அந்தக் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும். ஆட்சியில் சேராவிட்டால் பாஜக எம்எல்ஏ.க்களில் 3 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவை காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் புறக்கணித்தன. முன்னதாக அகர்தலா வந்த பிரதமர் மோடி காலை 10.30 மணிக்கு சாலை பேரணியில் பங்கேற்றார். அப்போது ஆயிரக் கணக்கான மக்கள் கூடி நின்று பிரதமர் மோடியை வரவேற்றனர். பல் மருத்துவரான மாணிக் சாஹா, கடந்த 2016-ம் ஆண்டுதான் பாஜகவில் சேர்ந்தார். அதன்பின், 2-வது முறையாக முதல்வராக அவர் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.