அனில் கபூர் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற மிஸ்டர் இந்தியா படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் சதீஷ் கௌஷிக். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள சதீஷ் கௌஷிக், பிரபல இயக்குநராகவும் திரையுலகில் வலம் வந்துள்ளார்.
1993-ல் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ரூப் கி ராணி சோரன் கா ராஜா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து தயாரிப்பாளராகவும் வலம் வரத் தொடங்கிய சதீஷ் கௌஷிக் பாலா இயக்கிய சேது படத்தை இந்தியில் ’தேரே நாம்’ எனும் பெயரில் ரீமேக் செய்தார். சல்மான் கான், பூமிகா நடிப்பில் வெளியான இந்தப் படம் பாலிவுட்டிலும் கவனமீர்த்து வெற்றி பெற்ற நிலையில், ஐஃபா, ஃபில்ம் ஃபேர் விருதுகளில் சிறந்த இயக்குநருக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
சுமார் 90 படங்களில் நடித்துள்ள சதீஷ் கௌஷிக், 13 படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில், நடிகர் சதீஷ் கௌஷிக் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக தகவல்கள் வெளியானது. இவரது இழப்பால் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ள பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சதீஷ் கௌஷிக்கின் நெருங்கிய நண்பரும் பாலிவுட்டின் பிரபல நடிகருமான அனுபம் கெர் சதீஷின் இறப்பு குறித்து திரையுலகினருக்கு அறிவித்து முன்னதாகப் பதிவிட்டுள்ளார். அதில், “மரணமே இவ்வுலகின் இறுதி உண்மை என்பதை நான் அறிவேன்! ஆனால் என் சிறந்த நண்பனைப் பற்றி ஒரு நாள் எழுதுவேன் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை. 45 ஆண்டு நட்புக்கு இப்படி ஒரு திடீர் முற்றுப்புள்ளி! நீங்கள் இல்லாமல் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது சதீஷ்!” என ட்வீட் செய்துள்ளார்.