திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் ரூ500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவசாயத்துறை பெண் அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த மீன்பிடி உபகரணங்கள் விற்பனை செய்யும் ஒருவர் நேற்று அங்குள்ள ஒரு வங்கியில் ரூ50 ஆயிரம் முதலீடு செய்வதற்காக சென்றார். தொடர்ந்து அவர் கொடுத்த பணத்தை வங்கி அதிகாரிகள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது அதில் 7 ரூ500 நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் உடனே ஆலப்புழா தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் விரைந்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்தது குறித்து சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரியாது என்பது தெரியவந்தது. இந்த பணத்தை திருவல்லா அருகே உள்ள எடத்துவா விவசாயத் துறை அதிகாரியான ஜிஷா மோள் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஜிஷா மோளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது? என்பது குறித்த விவரத்தை அவர் போலீசிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சம்பவத்தில் அரசுத்துறையை சேர்ந்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.