1972 -ம் ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் 6 வயதான குட்டி யானை பிடிக்கப்பட்டது. அங்கிருந்து கொண்டுவரப்பட்டு டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டது. அதுதான் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறையின் நம்பிக்கைக்குரிய கும்கி கலீம் யானை. தொடக்கத்தில் பழனிசாமி என்பவர் தான் கலீம் யானைக்கு பாகனாக இருந்தார். மணி என்பவர் அவருக்கு உதவியாளராக இருந்தார்.

பழனிசாமி மறைவுக்குப் பிறகு, மணி அதன் பாகன் ஆனார். எவ்வளவு பெரிய யானையாக இருந்தாலும் கலீம் பயப்படாமல் நிற்கும். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம்வரை ஏராளமான ஆபரேஷன்களில் ஈடுபட்டு தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளது.
மதுக்கரை மகாராஜா, சின்னத்தம்பி, அரிசிராஜா என கடந்த சில தசாப்தங்களில் நடந்த காட்டு யானை பிடித்தல், விரட்டுதல் போன்ற ஆபரேஷன்களில் கலீம் தான் ஈடுபடுத்தப்பட்டது. இதனாலேயே கலீம் கும்கிகளின் கேப்டன் என்றழைக்கப்படும். கோழிக்கமுத்தி முகாமில் உள்ள இளம் யானைகளின் பாகன்கள் எல்லாம், எப்படியாவது இதை கலீம் மாதிரி கொண்டு வரணும் என்று தான் நினைப்பார்கள்.

கலீமும், அதன் பாகன் மணியும் களத்தில் நண்பர்களைப் போல பேசி வேலை செய்வதை பார்த்து ரசிக்காதவர்கள் மிகவும் குறைவு. “நானும், கலீமும் அண்ணன், தம்பி போன்றவர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுவார் மணி.
இந்நிலையில் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தன் ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் கண்கள் ஈரமாகியுள்ளன. இதயம் முழுக்க நன்றியுணர்வு நிறைந்துள்ளது. கோழிக்கமுத்தி யானைகள் முகாமின் முக்கிய அடையாளமான கலீம் தன் 60 வது வயதில் ஓய்வு பெற்றுள்ளது.


கிட்டத்தட்ட 99 ஆபரேஷன்களில் ஈடுபட்டுள்ள கலீம் ஒரு லெஜண்ட் “ என குறிப்பிட்டு கலீமையும் மணியையும் பாராட்டியுள்ளார்.