தூத்துக்குடி: ‛திமுக.,வினர் மிசாவை சந்தித்தவர்கள், சர்காரியா கமிஷனையே தவிடுப்பொடியாக்கியவர்கள்; அண்ணாமலையின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்’ என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசியதாவது: ஆணாய் பிறந்து வீணாய் போனவர் அண்ணாமலை. அவர் என்ன பேசுகிறார், எதற்கு பேசுகிறார் என்றே தெரியவில்லை. இருவக்கு எப்படி ஐ.பி.எஸ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. சொல்றதுல ஒன்னுக்கூட உண்மையில்ல.
ஜெயலலிதா ஆளுமை
அதிமுக.,வில் இருப்பவர்களுக்கு சொரணை இருக்குமா என தெரியவில்லை. ஜெயலலிதாவை விட என் மனைவி 1000 மடங்கு ஆளுமை அதிகம் என அண்ணாமலை சொல்லுகிறார். தன் மனைவியுடன், ஜெயலலிதாவை ஒப்பிடுகிறார்.
இது எவ்வளவு பெரிய கேவலம். ஜெயலலிதா தான் பெரிய ஆளுமை என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக.,வினர் எல்லாரும் சொல்கின்றனர். ஆனால், அண்ணாமலை, தன் மனைவி தான் அவரைவிட அதிக ஆளுமைமிக்கவர் என்கிறார். அதற்கு அதிமுக.,வினர் யாரும் எதுவும் பேசவில்லை.
அண்ணாமலை மிரட்டலுக்கெல்லாம் திமுக பயப்படாது. திமுக.,வினர் மிசாவையே சந்தித்தவர்கள், சர்காரியா கமிஷனையே தவிடுப்பொடியாக்கியவர்கள். இதனை அண்ணாமலை உணர்ந்துக்கொள்ள வேண்டும். பா.ஜ.,வினரும், தமிழக கவர்னர் ரவியும், ‘சனாதன ஆட்சி நடத்த வேண்டும். அது தான் நன்மை’ என்று கூறுகிறார்கள்.
அப்படி ஒரு ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று தமிழக கவர்னர் கூறுகிறார். சனாதனம் என்ன சொல்கின்றது என்றால், பெண்கள் ஜாக்கெட் போடக்கூடாது, மேலாடை அணியக்கூடாது என கேவலமான சட்டம் போட்டிருந்தனர்.

சீமான்
பெண்கள் மேலாடை அணிந்திருந்தால் வரி, ஆண்கள் தாடி வைத்திருந்தால் வரி என்ற நிலைதான் கடந்த காலங்களில் இருந்தது. இதனை ஈ.வெ.ரா, நாராயணகுரு, ஐயா வைகுண்டர் போன்றோர் போராடி நீக்க வைத்தனர். இன்றைக்கு இளைஞர்கள் சீமான் பின்னால் செல்கின்றனர். சீமானுடைய பாட்டி, ஜாக்கெட் அணிய போராடி உரிமையை பெற்று தந்ததது திராவிட இயக்கம். சீமான் பின்னால் செல்லும் இளைஞர்களை அழைத்து இதுபோன்ற வரலாறு குறித்து வகுப்பு எடுக்க வேண்டும்.
திராவிடம்
இப்படிப்பட்ட சனாதன ஆட்சியை கொண்டுவர வேண்டும் என கவர்னர் சொல்கிறார். திராவிடம் என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு வேப்பம் காயாக கசக்கிறது. ஆகையால் தான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல்வர் ஸ்டாலின் இது திராவிட மாடல் ஆட்சி என்றார். திராவிட மாடல் ஆட்சி என்றால் ஆரியர்களுக்கு எதிரான ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்