புதுச்சேரி: புதுவையில் கலைஞருக்கு அவரது நினைவுநாளான ஆகஸ்ட் 8ம்தேதிக்குள் அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும் என்று திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அறையில், எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராக இருந்து எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்து தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திழகச் செய்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக இருந்து வழிநடத்தியவர். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்.
பொதுவாழ்வில் 80 ஆண்டுகாலம் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பணியாற்றிய மேனாள் தமிழக முதல்வர் கலைஞருக்கு புதுச்சேரி அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில திமுக சார்பில் இப்பேரவையில் கோரிக்கை வைத்தோம். கலைஞர் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று தங்களை நேரில் சந்தித்து சிலை நிறுவ வலியுறுத்தினோம். தாங்களும் தலைவர் கலைஞர் அவர்களோடு நெருங்கிய தொடர்பும், நட்பும் இருந்தது என்றும் அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றும் தெரிவித்ததோடு, புதுச்சேரி அரசு சார்பில் கலைஞருக்கு சிலை அமைக்கப்படும் என்று உறுதியளித்தீர்கள்.
ஆனால் அதற்கான முயற்சியை அரசு எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. கலைஞர் அவர்கள் மறைந்து, வருகின்ற ஆகஸ்ட 8ஆம் தேதியோடு 5 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. ஆகவே, கலைஞரின் நினைவு நாளுக்குள் புதுச்சேரி அரசு சார்பில் சிலை அமைக்க முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.