ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா; இந்திய அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவு நனவாகுமா?

பார்டர் கவாஸ்கர் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸூம் கண்டுகளித்தனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களம் இறங்கி, கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 6 மணி நேரத்திற்கும் மேலாகக் களத்தில் நின்று, 251 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் கவாஜா முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் தனது சதத்தை அடித்திருந்தார். கவாஜாவின் அசத்தலான சதத்தினால் முதல் நாள் ஆட்டம் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Khawaja

இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் அசத்தலான சதங்கள் ஆஸ்திரேலியா அணியை 480 ரன்கள் எடுக்க வைத்தது. மூன்று செஷன்களில் இரண்டு செஷன்களில் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. கவாஜா – கேம்ரூன் கிரீனின் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் இந்திய பௌலர்கள் திணறிக் கொண்டிருந்தனர். இன்றைய நாளின் முதல் ஓவரில் கேம்ரூன் கிரீன் அரை சதத்தை அடித்தார். இதன் மூலம் நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டினர். சுழல் பந்துவீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் பந்துகளை நேர்த்தியாக விளையாடி விக்கெட்டுகளை விடாமல் பவுண்டரிகளை விளாசிக் கொண்டிருந்தது இந்த இணை.

முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சிலும் அதிரடி காட்டியது கவாஜா- கீரின் கூட்டணி. 113வது ஓவரில் உமேஷ் யாதவ் பந்தில் இரண்டு பவுண்டர்களை அடித்து கிரீன் அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டினார்.

ஒரு முனையில் கவாஜா பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு தேவையான நேரங்களில் ரன்களை அடித்திருந்தார். ஆனால் மறுமுனையில் கிரீன் ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரியை அடித்தார். இதற்கிடையில் 356 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார் கவாஜா.

மிரட்டலாக விளையாடிக் கொண்டிருந்த கிரீன், பவுண்டரியுடன் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். இந்திய அணி ரன்களையும் கொடுத்து விக்கெட்டுகளையும் எடுக்காமல் ஆடியது பெரிய தலைவலியாக அமைந்திருந்தது. முதல் செஷன் முடிவில் இந்திய பௌலர்கள் கவாஜா – கிரீன் கூட்டணியை வீழ்த்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.

Green

இந்தக் கூட்டணியை வீழ்த்தினால் மட்டுமே ஸ்கோரை கட்டுப்படுத்த முடியும் என்ற சூழ்நிலையில் மீண்டும் அஷ்வினைக் கொண்டு வந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. இந்தக் கூட்டணியின் அதிரடி ஆட்டத்தை அவரே உடைத்தார். அஷ்வின் வீசிய லெக் சைட் பந்தில் கிரீன் ஸ்வைப் அடிக்க முயற்சி செய்ய, பந்து எட்ஜ் ஆகிவிட, விக்கெட் கீப்பர் பரத் அசத்தலாக கேட்ச் பிடித்தார். 170 பந்துகளில் 114 ரன்களை எடுத்து கிரீன் வெளியேறினார். இதன் மூலம் கவாஜா – கிரீனின் 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு அஷ்வினின் விக்கெட் வேட்டை தொடங்கியது.

அடுத்து ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி களமிறங்கினார். அவர் அஷ்வினின் அடுத்த ஓவரில் மிட் ஆஃப் ஏரியாவில் அடித்தபோது அதை அக்சர் பட்டேல் எளிதாக கேட்ச் பிடித்தார். ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார் அலெக்ஸ் கேரி. அடுத்தடுத்து முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் விழுந்ததால் ஆஸ்திரேலியா அணிக்குத் தடுமாறத் கொடங்கியது. மீண்டும் அஷ்வின் பந்தில் மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களில் அவுட்டானார்.

லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் லயனோடு கைகோத்து 200 ரன்களை நோக்கி கவாஜா ஆடிக் கொண்டிருந்தார். 140.3 ஓவரில் 400 ரன்களைத் தொட்டது ஆஸ்திரேலியா. பல மணி நேரங்களாக இந்திய பௌலர்களைத் திணற வைத்த கவாஜாவின் விக்கெட்டும் ஒரு வழியாக விழுந்தது. தேநீர் இடைவெளிக்குப்பின் முதல் பந்திலேயே கவாஜாவின் விக்கெட்டை அக்சர் படேல் வீழ்த்தினார். டிஃபன்ஸ் ஆட முற்பட்டபோது எல்.பி.டபுள்யூ ஆனது. ரிவ்யூ எடுக்க, அது இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது. இறுதியாக, கவாஜாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சிறப்பாக விளையாடி 422 பந்துகளில் 180 ரன்கள் குவித்திருந்தார் கவாஜா. இந்திய மண்ணில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சதம் அடிக்கும் இடதுகை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கவாஜா.

வேகமாக அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லயன் – மர்ஃபி கூட்டணி கடைசி நேரங்களில் அதிரடி காட்டினர். இது இந்திய பௌலர்களுக்குத் தேவையில்லாத அழுத்தத்தை கொடுத்தது. இந்தக் கூட்டணி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தது.

34 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த மர்ஃபியை எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆக்கினார் அஷ்வின். இதன் மூலம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி தனது 32வது 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்தார் அஷ்வின்.

அஷ்வின்

இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வலுவான ஸ்கோராக 480 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்திருந்தது. மூன்றாவது செஷனில் இந்தியா பேட்டிங் செய்ததற்கு அஷ்வினின் பந்து வீச்சு முக்கியமான காரணமாக அமைந்தது. கடைசி செஷனில் 10 ஓவர்கள் மீதம் இருந்தன. இந்திய அணியின் ஓப்பனர்கள் ரோஹித் சர்மா – கில் களமிறங்கினர். பத்து ஓவர்களில் விக்கெட் விடாமல் ஆடினாலே போதும் என்று எதிர்பார்த்தனர். இருப்பினும் ரோஹித் சர்மா பவுண்டரிகளை விளாசி பெரிய இலக்கிற்கான நம்பிக்கையை விதைத்தார். கில்லும் கடைசி ஓவரில் லயன் பந்தில் அபாரமாக லெக் சைடில் சிக்ஸர் ஒன்றை அடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் கில் 18 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்திய அணி 444 ரன்கள் பின்னடைவில் இருக்கின்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியின் கனவாக இருக்கும் டெஸ்ட் தொடரின் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நுழைய முடியும். இந்திய அணியின் ஓப்பனர்கள் நல்ல நம்பிக்கையைக் கொடுத்துள்ளனர். என்ன நடக்கிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.