"ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளின் கூட்டாளியாக ஆளுநர் ரவி செயல்படுகிறார்!" – கே.பாலகிருஷ்ணன் காட்டம்

திருவண்ணாமலை அருகே, கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் மத்திய அரசின் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி, நேற்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சி.பி.எம் கட்சியினர் அனைவரும் சுங்கச்சாவடியை நோக்கி பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், சி.பி.எம் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், “திருவண்ணாமலை, இனாம் காரியந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி என்பது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

நான்குவழிச் சாலைகளை அமைக்காமல், இருவழிச் சாலையாக இருக்கும்போதே சுங்கச்சாவடி அமைத்து மத்திய அரசு கொள்ளையடித்து வருகிறது. சுங்கச்சாவடி அமைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் இருந்தபோதிலும், அனைத்து விதிமுறைகளையும் மீறி திருவண்ணாமலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சுங்கச்சாவடியை எடுப்பதற்காக பலகட்டப் போராட்டங்களை நடத்தியும், இதுவரை எவ்வித பலனும் இல்லை.

இது தொடர்பாக எங்களைப் போன்ற கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்போது அரசும், காவல்துறையும் அடக்குவது நியாயமா… திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும். அதுவரை, 20 சுதுர கி.மீ தொலைவிலுள்ள பொதுமக்களுக்கு இலவசமாக சுங்கச்சாவடியில் அனுமதி வழங்கிட வேண்டும். பொதுமக்கள் நீர்நிலை புறம்போக்கில் குடிசை வீடு கட்டினால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்றம் செய்துவிடுகிறது. ஆனால், மத்திய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டிருக்கும் சுங்கச்சாவடி அலுவலகத்தை மாவட்ட நிர்வாகம் நீக்காதது ஏன்… ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா குறித்து ஆளுநர் செய்வது அராஜகமான செயல், ஜனநாயகத்துக்கு விரோதமானது. 

பாலகிருஷ்ணன்

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்ததுடன், பல ஆயிரம் கோடி ரூபாய் இழந்திருக்கிறார்கள். தங்களது சொத்தையும் இழந்து, குடும்பத்தையும் இழந்து, நடு வீதியில் நிற்கிறார்கள். தமிழ்நாடு அரசு இதற்காக சட்டமன்றத்தில் ஏகமனதாக சட்டம் இயற்றியபோதும், அதற்கு ஆளுநர் இரண்டாவது முறையாக விளக்கம் கேட்கிறார். அதுமட்டுமின்றி, தொடர்ந்து விளக்கம்  கேட்கும் தமிழக ஆளுநர் ரவி, ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்தும் கம்பெனிகளின் கூட்டாளியாகச் செயல்படுகிறார்” என்றார் காட்டமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.