சென்ற பகுதியில் மசாய் மாராவில் சிறுத்தையையும், நெருப்புக்கோழி கோழியையும் பார்த்துவிட்டு மாடுகளுடன் பயணித்த நாம் இப்போது மீண்டும் அக்டோபர் மாத இறுதியில் தன்சானியாவுக்குள் வருகிறோம்.
செரங்கெட்டி தேசிய பூங்காவின் தெற்குப்பகுதி, சற்று வறண்டு காணப்படும். இந்தப் பகுதியில் நவம்பர், டிசம்பரில் ஒரு குறுகிய மழைக்காலம் உண்டு. இந்த மழைக் காலத்தில் பெய்யும் மழை இந்தப் பகுதியை பசுமை ஆக்குகிறது. எங்கு பார்த்தாலும் உயரம் குறைவான புற்கள் கொண்ட பரந்த புல்வெளியை உருவாக்குகிறது இந்த மழை.
விலங்குகளின் ஊர்வலத்தில் ஐந்தாவது பகுதியான தெற்குசெரங்கெட்டி பகுதியைக் காட்டும் வரைபடம் (சிவப்பு அம்புக்குறி இடப்பட்டுள்ளது .)

உயரம் குறைவான புற்கள் கொண்ட நீண்ட சமவெளிப் பகுதி, ஆங்காங்கே சிறு சிறு மலைக்குன்றுகள், அந்த மலைக் குன்றுகளில் சிங்கம், சிறுத்தை, போன்ற வேட்டை விலங்குகள், புல்வெளிகளை நாடிவரும் லட்சக்கணக்கான காட்டு மாடுகள், வரிக்குதிரைகள், மான் கூட்டங்கள் இந்த இடத்தை மேலும் அழகாக்குகின்றன.
புகைப்படக் கலைஞர்களும், வனவிலங்கு குறித்து படம் எடுப்பவர்களும் (Wildlife Film Makers) இங்குதான் முகாமிட்டு தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்கின்றனர். மெள்ள நடந்து, புற்களை மேய்ந்து, இங்கு உள்ள வேட்டை விலங்குகளுக்கு உணவளித்து, வயிற்றில் குட்டியை சுமந்து, பிரசவத்திற்காக தான் பிறந்த நுடுத்து (Nduthu) பகுதிக்கு மெதுவாக நகர்கின்றன காட்டு மாடுகள்.
பிரசவத்திற்காக காட்டு மாடுகளை வழியனுப்பி வைத்து விட்டோம். இதற்கிடையில் இந்தக் காட்டை காக்கும் முக்கியமான மூன்று நபர்களைப் பற்றி நான் சொல்ல வேண்டும். வளமுடன் செழிக்க அங்கு வாழும் உயிரினங்கள் தன் பங்களிப்பைச் செய்து கொண்டே இருக்கும்.
அந்த வகையில் செரங்கெட்டிதேசிய பூங்காவை, பாதுகாக்கும் 3 முக்கிய நபர்களை இங்கே நான் அவசியம் கூற வேண்டும். காட்டில் அழுகும் நிலையில் உள்ள உயிரினங்களின் சடலங்களைத் துப்புரவு செய்யும் சுகாதாரப் பணியாளர்கள் இரண்டு பேர். அதில் முதலாவது கழுதைப் புலிகள் (Hyena)

கழுதைப் புலிகள் 25 வருடங்கள் வாழும். 60 முதல் 80 கிலோ எடை கொண்டவை. இவைகளில் மூன்று வகை உண்டு. நாய்களின் தோற்றத்தில் இவை இருந்தாலும் பூனை குடும்பத்தின் சொந்தக்காரர்கள் இவை. சிறு சிறு குழுக்களாக (CLANS) வாழும். குழுக்களை ஒரு பெண் தலைவி வழிநடத்தும். நல்ல பார்வைத் திறனும், கேட்கும் திறனும் கொண்ட கழுதைப் புலிகளின் சிரிப்பு சத்தம் ஆப்பிரிக்கக் காடுகளில் நான் தங்கி இருந்த நாட்களில் இரவு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தது நல்ல அனுபவம்.
இருபது வருடங்கள் உயிர் வாழும் இவை, தனது சொந்த கூட்டத்திலிருந்து விலகி பிற கூட்டத்தில் இருக்கும் கழுதைப் புலிகளுடன் இனச் சேர்க்கையில் ஈடுபடும். இதன் கர்ப்பகாலம் நான்கு மாதங்கள். இரண்டு முதல் 4 குட்டிகளை ஈனும். ஆப்பிரிக்காவில் இதன் எண்ணிக்கை 10 ஆயிரம். அதில் தான்சானியாவில் மட்டும் 7 ஆயிரம் உள்ளது. நமது இந்தியாவில் இதன் எண்ணிக்கை ஏறக்குறைய 1000 முதல் 3 ஆயிரம் வரை இருக்கலாம். கழுதைப்புலிகள் பற்றி நிறைய சொல்ல வேண்டும்.
இதன் பெண் தலைவிக்கு, வருடங்கள் ஆக ஆக ஹார்மோன் (Hormone) மாற்றத்தால் ஓர் ஆண் உறுப்பு (Pseudo Penis) உருவாகிறது. பார்ப்பதற்கு ஆண்கள் போலவே காட்சியளிக்கும். இதனை ஆணா, பெண்ணா எனக் கண்டுபிடிப்பது கடினம். மிகவும் உறுதியான தாடைகளைக் கொண்ட இவை. இறந்த விலங்குகளின் மூக்கிலிருந்து வால் வரை, பற்கள் முதல் எலும்பு வரை அனைத்தையும் தின்று செரித்துவிடும் தன்மையுடையது. காரணம் இதன் வயிற்றில் சுரக்கும் அபரிமிதமான அமிலத்தன்மை.
இங்கு வாழும் மசாய் மக்கள் இறந்தவுடன் தங்கள் உடல்களைப் புதைப்பதும் இல்லை. காரணம் அடுத்த ஜென்மத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் எரிப்பதும் இல்லை. ஏனெனில் மண்ணில் வாழும் ஜீவராசிகள் அழிந்துவிடும் என்ற நம்பிக்கை, எனவே அவர்கள் உடல்களைக் காடுகளில் விட்டுவிடுவார்கள். இது கழுதைப் புலிகளின் உணவுகளில் ஒன்று. கழுதைப் புலிகள் இறந்த உடல்களை மட்டுமா சாப்பிடும்? இல்லை, திறமையான வேட்டை விலங்குகள் இவை. கழுதைப் புலிகள் சிங்கத்தை விட வேட்டையில் கெட்டிக்காரர்கள். ஆம் இதன் வேட்டையில் 80% வெற்றி அடைகிறது. ஆனால் சிங்கத்தின் வெற்றி 40 சதவீதம் மட்டுமே.
இந்தக்காட்டு மாடுகளின் பேரணி (Wildbeast migration) நிகழ்வில் கழுதைப் புலிகள் எப்படி வேட்டையாடுகின்றன என்பதைக் காணும்போது ஆச்சரியம் எனக்கு.
காட்டு மாடுகள் பெரும்பாலும் தலைமையால் வழி நடத்தப்படுவதில்லை. கூட்டமாக திரியும் அவ்வளவுதான். கழுதைப் புலிகள் இதன் கூட்டத்தில் நுழைந்து விரட்டும். வயதான அல்லது காயம்பட்ட மற்றும் இளம் குட்டிகளைக் கண்டறிந்து குழுக்களாகச் சேர்ந்து தாக்கிக் கொல்லும். காட்டு மாடுகளை மட்டுமே கொல்லும் ஸ்பெஷலிஸ்ட் கழுதைப்புலிகள் கூட்டமும் இங்கு உள்ளது. ஆனால் வரிக்குதிரையை வேட்டையாடும் ஸ்பெஷலிஸ்ட் கழுதைப்புலிகள் வேறு டெக்னிக்குகள் கையாள்கின்றன.
பெரும்பாலும் வரிக்குதிரைகள் காலால் உதைக்கும் அல்லது பற்களால் கடித்துவிடும். இவை மேலும் ஒரு தலைவரால் (Stallion) வழிநடத்தப்படும்.

வரிக் குதிரைகளின் தலைவனை இனம்கண்டு, ஒரு கழுதைப் புலி தாக்க முயலும். அதை தலைமை வரிக்குதிரை விரட்ட ஆரம்பிக்கும். விரட்டிக்கொண்டு தலைவன் செல்ல அதன் மொத்த கூட்டமும் பின்னால் ஓடி வரும். இளம் மற்றும் நோய் நோய்வாய்ப்பட்ட வரிக்குதிரை சற்று பின்னால் ஓடி வர, அதன் பின்னால் ஓடி வரும் மற்ற கழுதைப் புலிகள் கூட்டம், கடைசியில் ஓடிவரும் வரிக்குதிரையை தாக்கிக் கொள்ளும். உங்கள் மனத்திரையில் இந்தக் காட்சிகளை கற்பனை செய்து பாருங்கள். கழுதைப் புலிகளின் புத்திக்கூர்மை உங்களுக்குத் தெரியும்.
அடுத்த அத்தியாயத்தில் பிரசவத்திற்கு செல்லும் காட்டு மாடுகளுடன் நாமும் சென்று செரங்கெட்டி காட்டை பாதுகாக்கும் இரண்டாவது நபரையும் சந்தித்து விடுவோம்!!!
இயற்கையின் அதிசயம்…
ஆப்பிரிக்காவில் மற்றொரு நாடான ஜாம்பியாவிற்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். அங்கு நடை பயணம் செல்லும்போது கண்ட ஒரு காட்சியை நான் குறிப்பிட வேண்டும்.

ஒரு இடத்தில் சிறுசிறு செடிகள் நிறைய காணப்பட்டன. அவற்றின் இலைகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு நிறம் மாறியது போன்ற தோற்றம் இருந்தது. இது என்ன செடி எனக் கேட்டோம். அதற்கு எங்கள் வழிகாட்டி அதோ தெரிகிறதே அந்த மரத்தின் (Rain Tree) சிறிய செடிதான் இது எனக் குறிப்பிட்டார். அது அவ்வளவு அழகான இலையைக் கொண்டிருக்கிறது. ஆனால் இங்குள்ள செடிகளின் இலைகள் அனைத்தும் நோய்த்தாக்குதல் ஏற்பட்டது போல் தெரிகிறதே? எனக் கேட்டோம்.

அவர் சொன்ன பதில்” இந்த மரங்கள் யானைக்கு மிகவும் பிடித்தமான உணவு. எனவே சிறு செடிகளாக இருக்கும்போது யானைகள் அவற்றைச் சாப்பிட்டு அழித்து விடும் என்பதால் இந்த மரங்கள் சிறு செடிகளாக இருக்கும் போது தனது இலைகளை சற்று அருவருக்கத்தக்க நிலையில் வைத்துக்கொள்கிறது. இதைப்பார்த்த யானைகள் மற்றும் பிற உயிரினங்கள் இவற்றைச் சாப்பிடாமல் விட்டுவிடுகின்றன. இதனால் அந்த மரங்கள் மெல்ல வளர்ந்து எட்டாத உயரத்திற்குச் சென்றதும் தனது இலை அமைப்பை மாற்றிக் கொள்கின்றது”என்றார்.
இயற்கையின் அதிசயம் தானே இது?