உக்ரைனில் ரஷியா ஏவுகணை மழை: 6 பேர் பலி

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகிறது. இதனால் உலகளவில் பொருளாதாரத்திலும், வினியோகத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆனாலும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை.

கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உக்ரைனில் பல பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதல்களில் டஜன் கணக்கிலான கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகின. 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஏவுகணை மழை

அதன்பிறகு நேற்று அதிகாலை நேரத்தில் உக்ரைனின் மின்சக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

வடக்கில் கார்கிவ் நகரம் தொடங்கி தெற்கே ஒடேசா, மேற்கில் ஜைட்டோமிர் நகரம் வரையிலும் ஏவுகணைகள் மழையாகப் பொழிந்தன.

கார்கிவிலும், ஒடேசாவிலும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின.

பல பகுதிகளில் மின்கட்டமைப்புகள் பெருத்த சேதத்துக்கு ஆளானதால் அவை இருளில் மூழ்கின.

தலைநகரிலும் தாக்குதல்

தலைநகர் கீவிலும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சமீப காலத்தில் ரஷியா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் இதுதான் என்று உக்ரைன் தெரிவித்தது.

அதே நேரத்தில் ரஷியாவின் 34 ஏவுகணைகளையும், ஈரான் தயாரிப்பான ஷாகித் டிரோன்கள் 4-ஐயும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

6 பேர் பலி

மேற்கு உக்ரைனில் லிவிவ் நகரில் ஒரு வீட்டின் மீது ஏவுகணை விழுந்து தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தகவலை அந்த பிராந்தியத்தின் கவர்னர் மாக்சிம் கோஜிட்ஸ்கி சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார்.

டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் ஏவுகணை, டிரோன்தாக்குதலில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கீவ் நகரில் தொடர்ந்து வான்தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் விடிய விடிய ஒலித்ததாக தெரிய வந்துள்ளது. அங்கு ஏவுகணை மற்றும் வெடிக்கும் டிரோன்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவற்றில் பல வழிமறித்துத் தாக்கப்பட்டதாகவும், ஆனால் அங்கு மின்சக்தி கட்டமைப்புகள் பாதிப்புக்குள்ளானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

உக்ரைன் அதிபர் தகவல்

அந்த நகர மேயர் விட்டாலி கிளிட்ஸ்கோ கூறும்போது, “கீவ் நகரத்தின் ஹோலோசீவ்ஸ்கி மாவட்டத்தில் வெடிச்சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. அங்கு பெரிய அளவில் கரும்புகை மண்டலம் உருவானது. சிவியாட்டாஸ்கின்ஸ்கி மாவட்டத்தில் ஏவுகணை தாக்குதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். கீவ் நகரத்தின் மேற்கு பகுதியில் ஏவுகணை தாக்குதலில் ஏராளமான கார்கள் எரிந்து நாசமாயின” என தெரிவித்தார்.

ரஷியா நடத்தி உள்ள இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “ரஷியா தனது பரிதாபமான தந்திரங்களை மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து நேற்றைய இரவு கடினமான இரவாக இருந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்வினியோகம் சீராகி வருகிறது” என தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.