சுற்றுவட்டார கிராமங்களில் அதிகரிப்பு நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் அதிகரிக்கும், சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களே அதிகம் உள்ளது. இந்நிலங்களில் தென்னை மற்றும் மானாவாரி, பல்வேறு காய்கறி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர். ஆனால், நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் தன்மைகொண்ட சீமைக்கருவேல மரங்கள், விவசாயம் நிறைந்த இடங்களில் இன்னும் அதிகம் இருப்பதை காண முடிகிறது.

 மேலும், ரோட்டோரம் மற்றும் புறம்போக்கு இடங்களிலும், குளம் மற்றும் பாசன கால்வாய் ஓரங்களிலும் வளர்ந்து வருவது தற்போது அதிகரித்துள்ளது.  அதிலும், வடக்கிபாளையம், பொன்னாபுரம், நடுப்புணி, சூலக்கல், நெகமம், முத்தூர், கஞ்சம்பட்டி, பூசாரிப்பட்டி, கிணத்துக்கடவு, ஆவல்சின்னாம்பாளையம், சமத்தூர், உள்ளிட்ட பல கிராமங்களில் ரோட்டோரம் சீமைக்கருவேல மரங்கள் உயரமாக முள்காடுபோல் வளர்ந்துள்ளது.

 இந்த சீமைக்கருவேல மரங்களை  அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ஆனால், நிலத்தடிநீரை உறுஞ்சும் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையில், அதிகாரிகள் தீவிரம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், ‘சீமைகருவேல மரங்கள் நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டவையாகும். மேலும் காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி விடுகிறது. கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்தாலும், கடந்த சில மாதமாக மழையின்றி உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் விரைவில் துவங்க உள்ள நிலையில், பல கிராமங்களில் குட்டைகளில் தண்ணீர் வற்ற துவங்கியுள்ளது.

 இச்சூழ்நிலையில், விவசாயம் நிறைந்த இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் மீண்டும் அதிகமாக இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற கோர்டு உத்தரவு பிறப்பித்தது. அந்நேரத்தில் கண்துடைப்புடன் குறிப்பிட்ட கிராமங்களில் மட்டும் சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்பட்டது.

அதன்பின், சீமைக்கருவேல மரங்களை  முழுமையாக  வெட்டி அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடாமல் கிடப்பில் போட்டதுடன், ஊராட்சி கிராமங்களில் சீமைக்கருவேலமரங்கள் வெட்டப்பட்டதற்கான தவறாக தெரிவித்துள்ளனர். தற்போது, சுற்றுவட்டார கிராமங்களில் அடுக்கடுக்காக சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து வருவதை அகற்றுவதற்கான நடவடிக்கை இன்னும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மணம் இல்லாமல் போகிறது.

 சில ஆண்டுக்கு முன்பு, சீமைக்கருவேல மரங்களை கணக்கெடுத்து அகற்ற வட்டார வளர்ச்சி அதிகாரிகள், வருவாய்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, இந்து சமய அறநிலையத்துறை கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும், தேசிய ஊரக வேலையுறுதி திட்ட பயனாளிகள் மூலம் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகளின் இந்த செயல்பாடு குறிப்பிட்ட சில மாதங்களே இருந்துள்ளது.  

கடந்த 15ஆண்டுகளில் கணக்கிடும்போது, குறிப்பிட்ட சில ஆண்டுகளை தவிர, பல ஆண்டுகள் போதிய மழையின்றி வறட்சி ஏற்பட்டது. வரும் காலங்களில் மழை எவ்வாறு பெய்யும் என சொல்ல முடியாது. எனவே, இனிவரும் காலங்களிலாவது சீமைக்கருவேல மரங்களை வேரோடு அப்புறப்படுத்தி விவசாயம் செழிக்கவும், நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருப்பதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.