சேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாளின் முகப்புத்தாளை மாணவிகளை கொண்டு தைக்க வைத்த விவகாரத்தில், தலைமை ஆசிரியை உள்ளிட்ட இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சேலம் மற்றும் சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் படித்து வருகின்றனர்.
தற்போது 10 ,11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் அரசு பள்ளி மாணவிகள் விடைத்தாளின் முகப்புத்தாலை தைக்கக்கூடிய காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அப்பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணையில், சிறப்பு வகுப்பு நடத்துவதாக கூறி மாணவிகளை அழைத்து வந்து வினாத்தாளின் முகப்புத்தாளை தைக்க வைத்தது அம்பலமானது.
இதனை அடுத்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவின் பேரில், தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, சிறப்பு ஆசிரியர் செல்வி ஆகியோரை பணியிடம் நீக்கம் செய்யப்பட்டனர்.