`தி.மு.க-வின் கூட்டணி மாறுகிறதா? பா.ம.க உள்ளே வருகிறதா? வி.சி.க வெளியேறி அ.தி.மு.க-வுக்குப் போகிறதா?’ போன்ற கேள்விகள்தான் தமிழ்நாடு அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக்! அதற்குத் தகுந்தாற்போல சில சம்பவங்களும், அரசியல் தலைவர்களின் பேச்சும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. எங்கிருந்து இப்படியானப் பேச்சுகள் கிளம்பின? உண்மையில் கூட்டணிக் கணக்குகள் மாறப்போகிறதா? சமீபத்திய சம்பவங்களுடம் அலசுவோம்.

சர்ச்சைத் தீயைப் பற்றவைத்த திருமாவின் ட்வீட்!
கடந்த பிப்ரவரி 23-ம் தேதி உச்ச நீதிமன்றம், `எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்’ என அதிரடியாக உத்தரவிட்டது. அப்போது அ.தி.மு.க கூட்டணிக்கட்சிகளே பெரிய அளவில் வாழ்த்து சொல்லாதபோது, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் முதல் ஆளாய் தனது ட்விட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில், “அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பா.ஜ.க’வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே!” என பதிவிட்டிருந்தார். இது தி.மு.க-வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய திருமாவின் பேச்சு!
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, பா.ஜ.க-வைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, த.வா.க உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “நான் (எடப்பாடி பழனிசாமிக்கு) வாழ்த்து சொன்னதும் எல்லோரும் என்னைத் திட்டுகிறார்கள். எனக்கென்ன இந்தப் பக்கம் போகலாமா? அந்தப் பக்கம் போகலாமா? என்ற அரசிலை நான் பண்ண வில்லை! நான் தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். பா.ஜ.க, பா.ம.க இருக்கும் கூட்டணியில் நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம். அரசியல் ரீதியாக எவ்வளவு பின்னடைவைச் சந்தித்தாலும் சரி, வி.சி.க ஒருகாலத்திலும் அவர்கள் இருக்கும் கூட்டணியில் இருக்காது! இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை; துணிந்து சொல்கிறேன்” என ஆவேசமாகப் பேசினார்.

மேலும், “தமிழ்நாட்டை வன்முறைக் காடாக்குவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்! வன்முறையைத் தூண்டுகிறார்கள்! தமிழக அரசே கவன குறைவாக இருக்காதே! காவல்துறையே மெத்தனமாக இருக்காதே! தமிழ்நாடு காவல்துறை பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டுமே தவிர, அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடாது!” என தி.மு.க அரசை எச்சரிக்கை செய்வதுப்போல பேசினார்.

பா.ஜ.க-வை கழட்டிவிட அ.தி.மு.க-வுக்கு அட்வைஸ் சொன்ன திருமா!
அதேசமயம் மற்றொரு பேட்டியில் திருமாவளவன், “பா.ஜ.க தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. அதனால், அ.தி.மு.க முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டும் என்பது கட்டாயம். எப்படி இருந்தாலும் அ.தி.மு.க-வை தனித்து செயல்பட விட மாட்டார்கள். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால், அ.தி.மு.க-வுக்கு எந்த பயனும் இல்லை. அது பா.ஜ.க-வுக்குதான் பயனளிக்கும். அதேபோல அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால், அ.தி.மு.க-வுக்கு மட்டும் பாதிப்பில்லை, தமிழ்நாட்டுக்கே பாதிப்பு. பா.ஜ.க-வை அ.தி.மு.க கழற்றிவிட வேண்டும். பா.ஜ.க இல்லாமல் அ.தி.மு.க தேர்தலை சந்திப்பது அ.தி.மு.க-வுக்கும் நல்லது. தமிழ்நாட்டுக்கும் நல்லது!” என அ.தி.மு.க மீதான கரிசனத்தை வெளிப்படுத்தினார்.
தூண்டிவிட்ட பா.ஜ.க அண்ணாமலை!
அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திருமாவளவன் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியில் வரவேண்டும் என்றால் தைரியமாக வரட்டும். ஏன் அவர் ஒருவாரமாக சாக்குபோக்கு காரணங்களைத் தேடி, பிதற்றிக்கொண்டிருக்க வேண்டும் என எனக்குப் புரியவில்லை. அவரையும் தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேற்ற தி.மு.க தயாராகிவிட்டபோலத் தெரிகிறது. அதற்கான ஆரம்பகால அறிகுறிகளைத்தான் இப்போது பார்க்கிறோம்!” எனத் தெரிவித்தார்.

மேலும், “திருமாவளவன் இப்படிப் பேசி அவரது பார்கைனிங் பவரை (பேரம் பேசுதல்) அதிகரித்துக்கொள்ளலாம். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் 2 எம்.பிக்குப் பதிலாக 3 எம்.பி சீட் கொடுத்தால் நன்றாக இருக்கும் என ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக அந்தக் கதையெல்லாம் ஆலோசித்துப்பார்க்கிறார்!” என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

தி.மு.க-வுடன் நெருக்கம் காட்டிய அன்புமணி!
இந்தநிலையில், `தி.மு.க பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிதாக எந்த கடுமையான விமர்சனங்களையும் பா.ம.க முன்வைக்கவில்லை. மாறாக தி.மு.க அரசு முன்னெடுத்த பல்வேறு விஷயங்களை அறிக்கை வெளியிட்டு பாராட்டுதான் தெரிவித்திருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். சில வாரங்களுக்கு முன்பு கூட, அன்புமணி கேட்ட உடனே அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து அவரை தலைமைச் செயலகத்தில் சந்தித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தற்போதும்கூட பா.ம.க பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், `விடியலுக்காக காத்திருக்கிறோம்; விடியல் தூரமில்லை’ என சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். இதைவைத்துப் பார்க்கும்போது தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம்பெற வாய்ப்பிருப்பதுபோலத் தெரிகிறது!’ என பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
சர்ச்சை நெருப்பை தண்ணீர் ஊற்றி அணைத்த திருமா, அன்புமணி!
இந்தநிலையில் எல்லா விமர்சனங்களுக்கும் பதிலளித்துப்பேசியிருக்கும் திருமா, “தி.மு.க-விற்கும், வி.சி.க-விற்கும் இடையே முரண்பாடுகளை, விரிசல்களை ஏற்படுத்த வேண்டும் என சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதற்கு ஒருபோதும் வாய்ப்பே இல்லை. அதுபோன்ற எண்ணங்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். ஆட்சி நிர்வாகத்தில் உள்ள சில குறைகளைச் சுட்டிக் காட்டுகிறோம். காவல்துறையின் போக்குகளை நாங்கள் சுட்டி காட்டுகிறோம். அது நாங்கள் தோழமையாகச் சுட்டி காட்டுகின்ற ஒன்று. ஆனால் எங்கள் நிலைப்பாட்டில் தொடக்கத்தில் இருந்து தெளிவாக இருக்கிறோம், உறுதியாக இருக்கிறோம். தி.மு.க கூட்டணியை வலிமைப்படுத்துவதுதான் எங்கள் நிலைப்பாடு. அது தமிழ்நாட்டையும் கடந்து அகில இந்திய அளவில் வழிகாட்டக்கூடிய அளவுக்கு வலிமைப்பெற வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. எந்த நிலையிலும் தி.மு.க-வுக்கும் விசிகவுக்கும் இடையே எவராலும் இடைவெளியை ஏற்படுத்த முடியாது!” என திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “பா.ம.க-வின் கலாசாரம் என்பது ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு, தேர்தல் நெருங்கி வரும் ஓரிரு ஆண்டுகளில் எந்தக் கூட்டணியில் இருக்கிறார்களோ அந்த கூட்டணியில் இருந்து மெல்ல விலகி, வேறொரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். ஒரே அணியில் இருந்தால் தங்களின் வலிமையைக் கூட்ட முடியாது என்பதை கட்சி நிர்வாகிகளுக்கு உணர்த்தவும், கட்சியை வலுப்படுத்துவதற்காகவுமே இது போன்ற உத்திகளை பா.ம.க கையாள்கிறது. தி.மு.க-வுடன் பேசிக்கொண்டே, அ.தி.மு.க-வின் பேரத்தை உயர்த்துவதும், அ.தி.மு.க-வுடன் பேசிக்கொண்டே தி.மு.க-விடம் பேரத்தை உயர்த்துவதும் பா.ம.க-வின் தேர்தல் தந்திரம்!’ என்றும் விமர்சித்திருக்கிறார்.

அதேபோல, பா.ம.க தலைவர் அன்புமணியும், “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி என்று சொல்வதெல்லாம் வதந்தி. அந்த வதந்தியை நம்ப வேண்டாம். தி.மு.க-வுடன் கூட்டணி தொடர்பாக நாங்கள் பேசவில்லை. தேர்தலுக்கு ஐந்து மாதத்துக்கு முன்பாகத்தான் தேர்தல் கூட்டணி குறித்து வெளிப்படுத்துவோம். எங்களுடைய நிலைப்பாடு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே! அதற்கேற்ப 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வியூகங்களை வகுப்போம்! அதுவரையில் இதுபோன்ற வியூகங்களை யாரும் நம்பாதீர்கள்!” எனத் தெரிவித்திருக்கிறார்.
என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!