திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் அமைந்துள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சக மாணவர்களால் கீழே தள்ளிவிடப்பட்ட மாணவர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரம் அரசுப்பள்ளியில் கீழே தள்ளிவிடப்பட்ட மாணவர் மணிகண்டன் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. தகராறில் சகமாணவர் தள்ளிவிட்டதில் விழுந்து காயமடைந்து மணிகண்டன் இறந்ததாக புகார் எழுந்த நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பகுதியில் அமைந்துள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மௌலீஸ்வரன் என்ற மாணவர் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று மதியம் மாணவர்கள் படிப்பதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில்அமர்த்தப்பட்டுள்ளனர்.

அப்போது மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் சிறு சிறு கற்களை எறிந்து விளையாடியதாக தெரியவந்துள்ளது. மௌலீஸ்வரனுக்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை என கூறப்படுகிறது. இருந்தபோதிலும் சக மாணவர்கள் 3 பேர் சேர்ந்து மௌலீஸ்வரனை அடித்து உதைத்து தாக்கியதாக தெரிகிறது.

இந்த மோதலில் தள்ளிவிடப்பட்ட மௌலீஸ்வரன் அருகில் இருந்த மரத்தின் மீது விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவர் மௌலீஸ்வரனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தகவலறிந்த முசிறி போலீசார் பள்ளி வளாகத்திற்கு நேரில் வருகை தந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 3 மாணவர்களை அழைத்து, விசாரணைக்காக வேறு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.