துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நடுநிலையோடு இருக்க வேண்டும்: காங்கிரஸ்

புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவரான ஜக்தீப் தன்கர், நடுநிலையோடு இருக்க வேண்டும் என்றும், அவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்து உற்சாகமளிப்பவராக இருக்க கூடாது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தியின் லண்டன் பேச்சினை விமர்சித்திருந்த மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கான பதிலடியாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்துகிறார்” என்று தெரிவித்திருந்தார். யாருடைய பெயரையும் குறிப்பிட்டு மாநிலங்களவைத் தலைவர் பேசவில்லை என்றாலும், அவர் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியைதான் குறிப்பிட்டுள்ளார் என அக்கட்சியின் ஊடக பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”சில அலுவல் பொறுப்புகள் நமது விருப்பு வெறுப்பு, கட்சி விசுவாசும், நாம் பின்பற்றி வரும் சித்தாந்தங்களில் இருந்து வெளியே நிற்க வேண்டிய நிர்பந்தத்தைக் கோருகிறது. அப்படியான அலுவல் பொறுப்புகளில், இந்திய துணைக்குடியரசுத் தலைவருக்கு அரசியல் அமைப்பு வழங்கியுள்ள கூடுதல் பொறுபான மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பு முதன்மையானது.

எனவே ராகுல் காந்தி குறித்த துணைக்குடியரசுத் தலைவரின் பேச்சு ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டப்படி நடுநிலையோடு அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய அவரின் பேச்சு குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் தருகிறது. ராகுல் காந்தியின் பேச்சு இங்குள்ள அடிப்படை யதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவே இருந்தது. ஆளுங்கட்சிக்கு அசவுகரியமாக இருந்ததாக கூறி, 12 எதிர்கட்சி எம்பிகளுக்கு சிறப்பு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளன.

பத்திரிகைகளும் ஊடகங்களும் மிரட்டப்படுவதால், அவை அரசாங்கத்தின் குரலை மட்டுமே ஒலிக்கின்றன. இங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்படவில்லை. எனினும், தற்போதைய அரசு அரசியல் சாசன அமைப்பை மதித்துப் பாதுகாக்கும் அரசாக இல்லை. இந்தச் சூழ்நிலையில், துணைக்குடியரசுத் தலைவரின் தற்போதைய பேச்சும், முந்தைய பேச்சுக்களும் இந்த சூழ்நிலைக்கு வலுசேர்ப்பதாகவே அமைந்திருக்கின்றன.

மாநிலங்களவைத் தலைவர், அனைவருக்குமான நடுநிலையாளராக, நண்பராக, ஆலோசகராக,வழிகாட்டியாக இருக்க வேண்டும். அவர் ஆளும் அரசுக்கு ஆதரவாக உற்சாகமளிப்பவராக இருக்கக்கூடாது. வரலாறு ஒரு தலைவரை, அவர் அவரது கட்சிக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக இருந்தார் என்பதை வைத்து அளவிடுவதில்லை. மாறாக, அந்தத் தலைவர் மக்களுக்காக அளித்த பங்களிப்பை வைத்தே அளவிடுகிறது.” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.